Posted in

உக்ரைன் சிறுவர்கள் வடகொரிய முகாம்களுக்குக் கடத்தல்: பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் தடைகள்!

ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைன் பகுதிகளிலிருந்து கடத்தப்பட்ட சிறுவர்கள், 9,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வடகொரியாவின் சோங்டோவோன் (Songdowon) சர்வதேசச் சிறுவர் முகாமிற்கு அனுப்பப்படுவதாக சர்வதேச அறிக்கைகள் தெரிவிக்கின்றன. உக்ரேனியச் சிறுவர்களுக்கு ரஷ்ய ஆதரவு பிரச்சாரங்களைப் புகட்டுவதற்கும் தீவிர சித்தாந்தப் பயிற்சி அளிப்பதற்கும் இந்த முகாம் பயன்படுத்தப்படுவதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.

மேலும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் இடையிலான இந்த ராணுவ மற்றும் நிதிப் பங்களிப்பில் பல பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்கள் பரிமாறப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை சர்வதேசச் சட்டங்கள் மற்றும் குழந்தைகள் உரிமைகளுக்கான உடன்படிக்கைகளை முற்றிலும் மீறும் செயல் என உக்ரைன் கடுமையாகச் சாடியுள்ளது. உக்ரேனியச் சிறுவர்களைக் கட்டாயமாக நாடுகடத்தி சித்தாந்த மாற்றம் செய்வதில் தொடர்புடைய சோங்டோவோன் முகாம் மீது பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் (EU) அதிகாரப்பூர்வத் தடைகளை விதித்துள்ளன. கலாச்சாரப் பரிமாற்றம் என்ற போர்வையில் இந்த முகாமை ரஷ்யா பயன்படுத்தி வருவதாக சர்வதேச மனித உரிமை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடத்தப்பட்ட சிறுவர்களைப் பாதுகாப்பாக மீட்கவும், இதில் தொடர்புடைய இரு நாட்டு தலைவர்கள் மீதும் சர்வதேசக் குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் ஐநா மற்றும் சர்வதேச அமைப்புகள் முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன.

அதேவேளையில், பாதிக்கப்பட்ட உக்ரேனியச் சிறுவர்களைத் தாய்நாட்டிற்குத் திரும்பக் கொண்டுவருவதற்கான தூதரக ரீதியான அழுத்தம் சர்வதேச அளவில் வலுத்து வருகிறது.