ஜெர்மனியின் சென்னலேகர் (Sennelager) ராணுவப் பயிற்சி மையத்தில் ‘ரைனோ டைட்டன்’ (Rhino Titan) என்ற பெயரில் 7 வாரங்களாகப் பெரிய அளவிலான கூட்டுப் போர் பயிற்சி நடைபெற்றது. இதன் இறுதிப் பகுதியாக, ராயல் ஏர் ஃபோர்ஸின் (RAF) நான்கு ஏ400எம் அட்லஸ் விமானங்களிலிருந்து பிரிட்டனின் 3-வது பட்டாலியன் பாராசூட் ரெஜிமென்ட் மற்றும் பிரெஞ்சு படையைச் சேர்ந்த சுமார் 600 வீரர்கள் பாராசூட் மூலம் குதித்து தரை இறங்கினர். நேட்டோ அமைப்பின் எல்லைகளைப் பாதுகாக்கவும், எதிரி நாடுகளின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவும் இந்த எக்சர்சைஸ் நடத்தப்பட்டுள்ளது.
கடந்த பல தசாப்தங்களில் இல்லாத அளவிற்கு மிகக் குறைந்த உயரத்தில் இருந்து ராணுவ வீரர்களையும் அதிநவீன உபகரணங்களையும் தரை இறக்கிப் பிரிட்டன் தனது வான்வழித் தாக்குதல் திறனை நிரூபித்துள்ளது. டிரோன்கள் மற்றும் மின்னணுப் போர்க் கருவிகளைப் பயன்படுத்தும் நவீன எதிரிப் படைகளை எவ்வாறு தடுத்து நிறுத்துவது என்பது குறித்து இந்த பயிற்சியில் பரிசோதிக்கப்பட்டது. “நேட்டோ பகுதிகளைப் பாதுகாக்கத் தேவையான விரைவான வான்வழிச் சக்தியை எங்களால் வழங்க முடியும் என்பதை இந்த கூட்டுப் பயிற்சி காட்டுகிறது” எனப் பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சர் வெஸ் ஸ்ட்ரீடிங் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் போருக்குப் பிறகு ஐரோப்பிய பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நேட்டோ படைகளின் இந்த கூட்டுப் பயிற்சி சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
சுமார் 2,500 ராணுவ வீரர்கள் பங்கேற்ற இந்த 7 வார போர் பயிற்சி வெற்றி கரமாக நிறைவடைந்துள்ள நிலையில், நேட்டோ படைகளின் தயார்நிலை மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது.