Posted in

தென்கொரிய எல்லைக்குள் அத்துமீறிய ரஷ்ய போர் விமானங்கள்: பதிலடி கொடுத்து போர் விமானங்களை இறக்கிய தென்கொரியா!

தென்கொரியாவின் வான் பாதுகாப்பு பகுதியான ‘காடிஸ்’ (KADIZ – Korea Air Defense Identification Zone) எல்லைக்குள் ரஷ்யாவின் பல ராணுவப் போர் விமானங்கள் திடீரென முன்அறிவிப்பின்றி நுழைந்த சம்பவம் கிழக்கு ஆசியப் பகுதியில் பெரும் அரசியல் மற்றும் இராணுவப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்கொரியாவின் கிழக்கே உள்ள உல்லுங்டோ மற்றும் டோக்டோ தீவுகளுக்கு அருகே ரஷ்ய விமானங்கள் ஊடுருவியதை அடுத்து, நிலைமையைக் சமாளிக்கத் தென்கொரிய வான்படை உடனடியாகத் தனது அதிநவீன போர் விமானங்களை அங்கே அனுப்பிப் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியது.

சர்வதேச விமான போக்குவரத்து விதிகளின்படி, ஒரு நாட்டின் வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்திற்குள் (ADIZ) வெளிநாட்டு இராணுவ விமானங்கள் நுழையும் போது முன்கூட்டியே திட்டமிட்ட பயண விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், ரஷ்யா எந்தவித முன்அறிவிப்பும் இன்றித் தென்கொரிய எல்லையை நோக்கித் தனது போர் விமானங்களை இயக்கியுள்ளது. இருப்பினும், இந்த விமானங்கள் தென்கொரியாவின் அதிகாரப்பூர்வ இறையாண்மைக்கு உட்பட்ட எல்லைக்குள் (Sovereignty Airspace) நுழையவில்லை என்றும், எல்லையைத் தொட்டுவிட்டுச் சிறிது நேரத்திலேயே அங்கிருந்து வெளியேறிவிட்டதாகவும் தென்கொரிய கூட்டுப் படைத்தலைவர்கள் (JCS) உறுதிப்படுத்தியுள்ளனர்.

ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் இணைந்து பசிபிக் மற்றும் கிழக்கு ஆசியப் பகுதிகளில் கூட்டு ரோந்துப் பயிற்சிகளை (Joint Air Patrols) நடத்தி வரும் வேளையில் இத்தகைய சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. அமெரிக்கா, தென்கொரியா மற்றும் ஜப்பான் இடையேயான மும்முனை ராணுவக் கூட்டணியின் பலத்தைக் சோதிப்பதற்காகவும், அப்பகுதியில் தங்களது இராணுவப் பலத்தைக் காண்பிப்பதற்காகவும் ரஷ்யா இத்தகைய நுணுக்கமான உத்திகளைக் கையாண்டு வருவதாகப் பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எல்லை பகுதியில் எதிர்பாராத மோதல்கள் அல்லது விபத்துகள் ஏற்படுவதைத் தடுக்கும் பொருட்டு தென்கொரியா தனது வான் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தியுள்ளது. மேலும், முன்அறிவிப்பின்றித் தங்கள் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் அத்துமீறிப் பிரவேசித்த ரஷ்யாவின் இந்தச் செயலுக்குத் தென்கொரிய பாதுகாப்பு அமைச்சகம் தனது பலத்த கண்டனத்தையும் எதிர்ப்பையும் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யவுள்ளது.