நிதிநிலை அறிக்கையின் போது தமிழ் மொழி குறித்துப் பேசிய அமைச்சர் என். மரிய வில்சனின் (N. Marie Wilson) சர்ச்சைக் கருத்துக்களுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார். “சொந்தத் தம்பியின் குடும்பத்தை உருட்டுகட்டையால் தாக்கிய உங்கள் அன்பை உலகம் ஏற்கனவே கண்டுள்ளது” எனக் குறிப்பிட்டு, அமைச்சரின் பேச்சுக்குச் சீமான் காரசாரமாகப் பதிலடி கொடுத்துள்ளார்.
சட்டமன்றத்தில் நிதி நிலை அறிக்கை மீதான விவாதத்தின் போது பேசிய அமைச்சர் மரிய வில்சன், “நான் கிறிஸ்தவனாகப் பிறந்தவன்; என் மதம் எனக்கு அன்பைக் கற்றுத் தந்துள்ளது, ஆனால் தமிழ் எனக்கு அன்பைக் கற்றுத் தரவில்லை” என்று கூறியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. தமிழ் மொழியையும் தமிழர்களின் அடையாளத்தையும் கொச்சைப்படுத்தும் வகையில் பேசிய அமைச்சரின் இந்த உரைக்கு அரசியல் கட்சிகள் மற்றும் தமிழ் அமைப்புகள் இடையே கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்த விவகாரம் குறித்துக் கடுமையான அறிக்கை வெளியிட்டுள்ள நாம் தமிழர் கட்சியின் சீமான், அமைச்சரின் பேச்சுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “அன்பின் உருவமாகத் திகழும் தாய்மொழியான தமிழை இழிவுபடுத்தும் உரிமை எவருக்கும் இல்லை. சொந்தத் தம்பியின் வீட்டிற்குள் புகுந்து குடும்பத்தினரை உருட்டுகட்டையால் தாக்கியபோது வெளிப்பட்டதா உங்கள் மதம் கற்றுக்கொடுத்த அன்பு?” என்று சீமான் கேள்விகளை எழுப்பிக் கடுமையாகச் சாடியுள்ளார்.
மேலும், கிறிஸ்தவத்தையும் தமிழையும் பிரித்துப் பார்க்கும் அமைச்சரின் அறியாமை சுட்டிக்காட்டப்பட வேண்டும் என்றும், வீரமாமுனிவர் மற்றும் ஜி.யு. போப் போன்ற மேலைநாட்டு அறிஞர்கள் தமிழின் அன்பையும் பெருமையையும் உலகிற்குப் பறைசாற்றிய வரலாற்றை அமைச்சர் நினைவில் கொள்ள வேண்டும் என்றும் கூறினார். தமிழ் மொழியை இழிவுபடுத்தி அவையில் பேசியதற்காக அமைச்சர் மரிய வில்சன் உடனடியாகச் சட்டமன்றத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனச் சீமான் வலியுறுத்தியுள்ளார்.