தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகவிருக்கும் புதிய திரைப்படத்தின் அறிவிப்பு, வெளியானது முதலே சமூக வலைத்தளங்களில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. இப்படத்தின் போஸ்டரை பகிர்ந்து தயாரிப்பாளர் நாக வம்சி வெளியிட்ட எக்ஸ் (X) பதிவில், “வடக்கே பிறந்தவர், மையப்பகுதியில் வடிவமைக்கப்பட்டவர், தெற்கே வணங்கப்படுபவர்” என முருகப்பெருமானின் வரலாற்றை வடமாநிலத்தோடு ஒப்பிட்டு குறிப்பிட்டிருந்தார். தமிழர்களின் முதன்மை இறைவனான முருகனை வடபுலத்தில் பிறந்தவர் என சித்தரித்திருப்பதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தற்போது கடுமையான கண்டனத்தையும் ஆவேச எச்சரிக்கையையும் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், “வணிக நோக்கத்திற்காக தமிழர்களின் பெருமைமிகு அடையாளங்களில் கை வைப்பதை தமிழ் பிள்ளைகளாகிய நாங்கள் இனியும் வேடிக்கை பார்க்க மாட்டோம். 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு மூத்த தொன்மை வரலாறு கொண்ட தமிழ் பேரினத்தின் மெய்யியல் கோட்பாட்டையும், குறிஞ்சி நிலத் தலைவனான எங்கள் முப்பாட்டன் முருகனின் வரலாற்றையும் அடிப்படை புரிதலற்று கலை என்ற பெயரில் திரித்து திணிக்க முயல்வது வன்மையான கண்டனத்துக்குரியது” என்று சாடியுள்ளார். மேலும், இயற்கையை தொழுது போற்றுவதும், மறைந்த மூத்த முன்னோர்களை நடுகல் நட்டு வணங்குவதுமே தமிழர்களின் ஆதி மரபு என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழினத்தின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் மீறி, இதே தவறான வரலாற்றுத் திரிபுகளுடன் இத்திரைப்படம் உருப்பெற்று வெளிவந்தால் மிகக் கடுமையான எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என படக்குழுவினருக்கு சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாட்டு திரையரங்க உரிமையாளர்கள் இந்த திரைப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிடக் கூடாது என்ற ஒருமித்த முடிவை எடுக்க வேண்டும் என்றும், மீறி திரையிட முயன்றால் தமிழ்நாட்டில் எந்தவொரு திரையரங்கிலும் இந்த படத்தை ஓடவிடாமல் மிகப்பெரிய போராட்டங்களை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் என்றும் அவர் தனது அறிக்கையில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
கலை என்ற பெயரில் தமிழ்ப் பண்பாட்டைச் சிதைக்கும் இதுபோன்ற நடவடிக்கைகள் தமிழ்நாட்டில் தேவையற்ற சட்டம் – ஒழுங்கு சிக்கலை ஏற்படுத்தும் என்பதால், தமிழ்நாடு அரசும் இதில் முன்கூட்டியே தலையிட வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். இத்திரைப்படத்தின் தமிழ் பதிப்பையோ அல்லது தெலுங்கு பதிப்பையோ தமிழகத்திற்குள் திரையிட அரசு அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் தமிழ் மற்றும் தெலுங்கு நெட்டிசன்கள் இடையே முருகனின் தோற்றம் குறித்து காரசாரமான விவாதங்கள் நடந்து வரும் வேளையில், சீமானின் இந்த அரசியல் ரீதியிலான தலையீடு கோலிவுட் மற்றும் டோலிவுட் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.