Posted in

தலித் என்பதால் திட்டமிட்டு அடித்துக் கொலை: இளைஞர் ஆகாஷ் மரணத்தில் சிபிசிஐடி குற்றப்பத்திரிகை அம்பலம்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தலித் இளைஞர் ஆகாஷ் டெலிஷன் (26) கடந்த மார்ச் மாதம் போலீஸ் காவலில் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி (CB-CID) போலீசார், தாக்கல் செய்துள்ள இறுதி குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சியளிக்கும் பல உண்மைகள் அம்பலமாகியுள்ளன. ஆகாஷ் பட்டியலின (தேவேந்திரகுல வேளாளர்) சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதை நன்கு அறிந்திருந்த காவல் ஆய்வாளர் திலீபன் உள்ளிட்ட 6 போலீஸ்காரர்கள், சாதிய வன்மத்துடன் அவரைத் திட்டமிட்டு அடித்துக் கொலை செய்துள்ளதாக அக்குற்றப்பத்திரிகையில் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 6-ஆம் தேதி, ஆகாஷை மானாமதுரை அருகே உள்ள ஒரு தனிமையான தைலமரக் காட்டுக்கு அழைத்துச் சென்ற போலீசார், அவரது கண்களைக் கட்டி இரும்பு கம்பியால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். வலது காலின் முழங்காலுக்குக் கீழே இரும்பு கம்பியால் கொடூரமாக அடித்து எலும்புகளை உடைத்ததால், ரத்த நாளங்களில் கொழுப்பு அடைப்பு (Fat Embolism) ஏற்பட்டு ஆகாஷ் உயிரிழந்ததாகப் பிரேதப் பரிசோதனை மற்றும் விசாரணை அறிக்கைகள் உறுதிப்படுத்தியுள்ளன. மேலும், தங்களது கொடூரச் செயலை மறைப்பதற்காக, போலீசிடமிருந்து தப்பிக்க முயன்று பாலத்தில் இருந்து குதித்ததால் ஆகாஷுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதாகப் போலியான கதையைப் புனைந்து காவல் நிலைய ஆவணங்களில் வழக்குப் பதிவு செய்ததும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
ஆகாஷைத் தாக்கிய ஆயுதங்களை மறைத்து, சாட்சியங்களை அழித்த காவல் ஆய்வாளர் திலீபன், உதவி ஆய்வாளர் குகன் மற்றும் காவலர்கள் காளீஸ்வரன், மகேந்திரன், தெய்வேந்திரன், பழனியப்பன் ஆகிய 6 பேர் மீதும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் (SC/ST Act) மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் கீழ் கொலை, சாட்சியங்களை அழித்தல் உள்ளிட்ட பல பிரிவுகளில் சிபிசிஐடி தரப்பில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மதுரை நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 18-ஆம் தேதியே இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட போதிலும், 66 நாட்களுக்குப் பிறகே தொடர் போராட்டங்களின் விளைவாக அதன் நகல் ஆகாஷின் குடும்பத்தினருக்கு தற்போது வழங்கப்பட்டுள்ளது.
கொலைக்கான முகாந்திரம் மற்றும் சாட்சிகள் சிபிசிஐடி விசாரணையில் தெளிவாக நிரூபிக்கப்பட்ட பிறகும், குற்றம் சாட்டப்பட்ட 6 போலீசாரும் இதுவரை கைது செய்யப்படாதது மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் ஆகாஷின் குடும்பத்தினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. “என் மகனைக் கொடூரமாக அடித்துக் கொன்ற காவலர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்; மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற காவல் அதிகாரிகளையும் வழக்கில் சேர்க்க வேண்டும்” என ஆகாஷின் தாய் ஆனந்தி கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார். காவல் துறை உயரதிகாரிகளின் வழக்குத் தொடரும் ஒப்புதலுக்காக சிபிசிஐடி காத்திருப்பதாகக் கூறப்படும் நிலையில், இந்த விவகாரத்தில் அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு பொதுவெளியில் எழுந்துள்ளது.