Posted in

சிவகங்கையில் வடமஞ்சுவிரட்டு காணச் சென்ற ரவுடி மதன் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை

சிவகங்கை மாவட்டம் புதுப்பட்டியைச் சேர்ந்த மதன் என்ற சுள்ளான் மதன் (26), கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கொல்லங்குடி தோட்டத்தில் இருவர் கொல்லப்பட்ட இரட்டை கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கைதாகிச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த அவர், ஞாயிற்றுக்கிழமை மதியம் ஒக்கூர் அருகே உள்ள மேலமங்கலம் கிராமத்தில் நடைபெற்ற வடமஞ்சுவிரட்டுப் போட்டியைப் பார்ப்பதற்காகத் தனது நண்பர்களுடன் சென்றிருந்தார். அங்குள்ள நாடக மேடை அருகிலுள்ள கரும்புத் தோட்டப் பகுதியில் அவர் நின்றுகொண்டிருந்தபோது, அங்கு ஆயுதங்களுடன் வந்த கும்பல் அவரைச் சுற்றி வளைத்தது.

நிலைமையை உணர்ந்து தப்பியோட முயன்ற மதனை அந்த மர்மக் கும்பல் விடாமல் துரத்திச் சென்று கரும்புத் தோட்டத்திற்குள் வைத்து அரிவாள் மற்றும் வாள்களால் சரமாரியாக வெட்டியது. இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்த சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா மற்றும் காவல்துறையினர் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முன்விரோதம் காரணமாக இந்தச் கொலை அரங்கேறி இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில், குற்றவாளிகளைக் கைது செய்யக் காவல்துறையினர் மூன்று தனிப்படைகளை அமைத்துள்ளனர்.

இந்தத் தாக்குதலில் தொடர்புடைய மூவரைப் பிடித்து விசாரித்து வரும் காவல்துறையினர், தப்பியோடிய மற்ற நபர்களையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.