Posted in

ரிப்பன் மாளிகையில் ஆய்வு: கட்டுப்பாட்டு மைய ஊழியர்களைப் பாராட்டிய முதல்வர் விஜய்

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணிகள் மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்துத் தலைமைச் செயலகம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் முதல்வர் சி. ஜோசப் விஜய் தீவிர ஆலோசனை நடத்தினார். அதன் தொடர்ச்சியாக, பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் அமைந்துள்ள அவசரகாலக் கட்டுப்பாட்டு மையத்திற்கு அவர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

கட்டுப்பாட்டு அறைக்கு வந்த பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் புகார்களை ஊழியர்கள் கையாள்வது குறித்தும், மழைநீர் தேங்கியுள்ள பகுதிகள் மீட்கப்படும் வேகம் குறித்தும் அவர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். துரிதமாகச் செயல்பட்டு மழைநீர் அகற்றும் பணிகளை மேற்கொண்டுவரும் கட்டுப்பாட்டு மைய ஊழியர்களின் அர்ப்பணிப்பைப் பாராட்டி அவர்களுக்கு அவர் கைதட்டி உற்சாகம் ஊட்டினார். ஆய்வுப் பணிகளை முடித்துவிட்டு வெளியே வந்த அவர், ரிப்பன் மாளிகை வளாகத்தின் சாலையோரம் கூடிநின்ற பொதுமக்களைப் பார்த்துச் சிறிது தூரம் நடந்து சென்று கையசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

முதலமைச்சரை நேரில் கண்ட பொதுமக்களும் அங்குள்ள ஊழியர்களும் அவருக்கு உற்சாகமான வரவேற்பையும் ஆரவாரத்தையும் அளித்தனர்.

மழைக்காலத் துயர்தடை மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.