தென்கொரியாவின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான ஜெஜூ தீவில் (Jeju Island) கடந்த மூன்று நாட்களில் மட்டும் 4 சடலங்கள் அடுத்தடுத்துக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியையும் சமூக வலைத்தளங்களில் பல்வேறு அச்சங்களையும் ஏற்படுத்தியுள்ளது. பல மாதங்களாகக் காணாமல் போனவர்களின் சடலங்கள் இவ்வாறு தொடர்ச்சியாக மீட்கப்பட்டு வருவதால், தீவில் தொடர் கொலையாளி (Serial Killer) யாராவது நடமாடுகிறாரா அல்லது மனிதக் கடத்தல் கும்பல் செயல்படுகிறதா என்ற அதிர்ச்சி விவாதங்கள் இணையத்தில் காட்டுத்தீ போலப் பரவி வருகின்றன.
குறிப்பாக, கடந்த மே மாதம் காணாமல் போன 37 வயதான சாங் மி-ரான் என்ற பெண்ணின் சடலம் உட்பட நான்கு பேரின் உடல்கள் ஆகஸ்ட் 22 முதல் 24 வரை வெவ்வேறு இடங்களில் கண்டெடுக்கப்பட்டன. ஆனால், இந்த இறப்புகளுக்கு இடையே எந்தவொரு நேரடித் தொடர்போ அல்லது கொடூரமான குற்ற பின்னணியோ இருப்பதற்கான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை என்றும், தொடர் கொலையாளி நடமாட்டம் என்ற கூற்றில் உண்மையில்லை என்றும் காவல்துறை அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
இருப்பினும், இந்த விவகாரம் தென்கொரியக் காவல்துறையின் மிகப்பெரிய அலட்சியத்தையும் அதிகார முறைகேட்டையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. ஜெஜூ தீவில் பணியாற்றிய ‘பூ’ (Bu) என்ற காவல் அதிகாரி ஒருவர், காணாமல் போனவர்கள் குறித்து உறவினர்கள் அளித்த புகார்களை விசாரிக்காமலேயே, “அவர்கள் குடும்பத்துடன் தொடர்பில் இருக்க விரும்பவில்லை” எனப் போலி ஆவணங்களைத் தயாரித்து சுமார் 298 வழக்குளைத் தன்னிச்சையாக முடித்து வைத்த அதிர்ச்சித் தகவல் விசாரணையில் அம்பலமானது.
காவல்துறையின் இந்த மோசடியால்தான் காணாமல் போனவர்களைத் தேடும் பணி தாமதமாகி சடலங்களாக மீட்கப்படும் நிலை உருவானதாகப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் ஆவேசமடைந்துள்ளனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட காவல் அதிகாரி உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், தென்கொரிய அதிபர் லீ ஜே-மியோங் (Lee Jae-myung) காணாமல் போன வழக்குகளைக் கையாளும் நடைமுறைகள் குறித்து நாடு தழுவிய தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.