தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான அரசு சார்பில் மகளிருக்காக அறிவிக்கப்பட்டுள்ள இலவச மடிக்கணினி, தங்கம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை விமர்சித்து பாமக மகளிர் அணி நிர்வாகி சவுமியா அன்புமணி பேசிய கருத்துகள் தமிழக அரசியல் களம் மற்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. தவெக அரசு அண்ணன் சீர், தாய்மாமன் சீர் போன்ற பெயர்களில் திட்டங்களை அறிவித்து வருவது குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், இந்த சுவாரசியமான கேள்வியை முன்வைத்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய சவுமியா அன்புமணி, “தமிழகத்தில் அரசுத் திட்டங்களுக்குப் பெயர் வைப்பதில் பெரிய போட்டியே நடக்கிறது. தவெக அரசு சார்பில் ‘அண்ணன் சீர்’, ‘தாய்மாமன் சீர்’ என்றெல்லாம் சீர் வரிசை திட்டங்களை அள்ளித் தருகிறார்கள். தாய்மாமனாக இருந்து விஜய் சீர் கொடுத்து விடுவார்; ஆனால் பாசத்தோடு இருக்கும் அத்தை சீர், பாட்டி சீர் எல்லாம் யார் கொடுப்பார்கள்?” என நையாண்டியாகக் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், பெயரளவில் மட்டுமே சீர் வரிசை திட்டங்களை அறிவிக்காமல், தமிழக மக்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் உண்மையான நலத்திட்டங்களுக்கு அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார். குறிப்பாகக் கூட்டுறவு மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள அனைத்துக் கடன்களையும் நிபந்தனையின்றி முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதே பொதுமக்களின் முதன்மையான எதிர்பார்ப்பாக உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசின் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் தற்காலிக மகிழ்ச்சியைத் தந்தாலும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவது, வேலைவாய்ப்புகளை உருவாக்குவது மற்றும் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வது போன்ற நிலையான நடவடிக்கைகளே மக்களுக்கு உண்மையான பலனைத் தரும் என்று சவுமியா அன்புமணி கூறினார். பாமக தரப்பில் எழுப்பப்பட்டுள்ள இந்தக் காரசாரமான கேள்விகள் தவெக தொண்டர்கள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் காரசார விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.