Posted in

மத்திய அரசுக்கு கோரிக்கை ஸ்டாலின் வைத்த அதிரடி கோரிக்கை!

மத்திய பாஜக அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த உத்தேசித்துள்ள வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்தச் சட்ட மசோதாவுக்கு (FCRA Amendment Bill) கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இந்த ஜனநாயக விரோத சட்டத்தை உடனடியாக முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய அரசின் இந்த புதிய சட்டத் திருத்தம், நாட்டில் இயங்கி வரும் அரசு சாரா தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் (NGOs), குறிப்பாகக் கிறிஸ்தவ அமைப்புகள், தேவாலயங்கள் மற்றும் சிறுபான்மையினரின் கல்வி மற்றும் சமூக நல நிறுவனங்களைக் குறிவைத்து முடக்கும் விதமாக அமைந்துள்ளதாக முதலமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார். வக்பு வாரிய சட்டத் திருத்த முயற்சியைத் தொடர்ந்து, தற்போது சிறுபான்மையினருக்கு வெளிநாடுகளிலிருந்து வரும் நிதி உதவிகளைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சாடியுள்ளார்.

இந்தச் சட்டத் திருத்தத்தின் மூலம் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பதிவை எவ்வித தகுந்த காரணமுமின்றி ரத்து செய்யவும், அவற்றுக்குச் சொந்தமான பள்ளி, கல்லூரி மற்றும் மருத்துவமனை உள்ளிட்ட சொத்துக்களை அரசு அதிகாரம் கொண்ட அமைப்பின் கீழ் கொண்டுவரவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள மத சுதந்திரம், அடிப்படை உரிமைகள் மற்றும் சிறுபான்மையினருக்கான பாதுகாப்புப் பிரிவுகளுக்கு முற்றிலும் எதிரானது என ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியாவில் ஏழை எளிய மற்றும் விளிம்புநிலை மக்களுக்குக் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசியச் சேவைகளை வழங்கி வரும் இந்த அமைப்புகளை முடக்குவது, நாட்டின் சமூக நல உள்கட்டமைப்பையே பாதிக்கும் என எச்சரித்துள்ள அவர், தேர்தல் பின்னடைவுகளுக்குப் பயந்து தற்காலிகமாக இதை நிறுத்தி வைக்காமல், முழுமையாகக் கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். முதலமைச்சரின் இந்த உறுதியான கோரிக்கை தேசிய அளவில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.