Posted in

புதிய உச்சத்தை எட்டிய சூப்பர் எல் நினோ: முதன்முறையாக 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவு!

உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் சூப்பர் எல் நினோ மண்டலம் புதிய வரலாற்று உச்சத்தை தொட்டுள்ளதாக டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார். பசிபிக் பெருங்கடலின் நினோ 3.4 பகுதியில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை முதன்முறையாக 30 டிகிரி செல்சியஸை கடந்துள்ளதாக அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 1981 ஆம் ஆண்டு முதல் சேகரிக்கப்பட்டு வரும் தினசரி வெப்பநிலைப் பதிவுகளில், இந்தப் பகுதியில் வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸைக் கடப்பது இதுவே முதன்முறை ஆகும். இதற்கு முன்னதாக கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் தேதி 29.82 டிகிரி செல்சியஸ் பதிவானதே அதிகபட்ச அளவாக இருந்தது.

வர்த்தகக் காற்றுகள் பலவீனமடைவது மற்றும் கெல்வின் அலைகள் மூலமாக வெப்பம் கிழக்கு நோக்கி நகர்வது போன்ற காரணங்களால் எல் நினோ இணைப்பு தொடர்ந்து வலுவடைந்து வருகிறது. கடல் மற்றும் வளிமண்டலத்திற்கு இடையே ஏற்பட்டுள்ள இந்த வலுவான மாற்றம் காரணமாக உலகளாவிய வானிலை அமைப்புகளில் பெரிய அளவிலான மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.

சூப்பர் எல் நினோ தீவிரமடைந்து வருவதன் காரணமாக, வரும் நாட்களில் பல்வேறு நாடுகளில் தீவிர வானிலை நிகழ்வுகள் மற்றும் பருவமழை மாற்றங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. நிலவரங்களைத் தொடர்ந்து கண்காணித்து வரும் வானிலை ஆய்வாளர்கள், எதிர்வரும் காலங்களில் நிலவக்கூடும் வானிலை சவால்கள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர்.