பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் தீவிர வெப்பநிலை மாற்றங்களால் உருவாகும் ‘சூப்பர் எல் நினோ’ (Super El Niño) நிகழ்வு காரணமாக, வரும் 2027 பிப்ரவரி மாதத்திற்குள் உலகம் முழுவதும் சுமார் 4,51,000 மக்கள் உயிரிழக்கக் கூடும் என்றும், இந்தியாவில் மட்டும் 16,000 பேரின் உயிர்களுக்கு ஆபத்து நிலவுவதாகவும் சர்வதேசக் காலநிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை எச்சரித்துள்ளது.
பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு நீர் வழக்கத்தை விடப் பெருமளவில் வெப்பமடைவதையே ‘எல் நினோ’ என்று அழைக்கிறோம். இந்த நிகழ்வு தீவிரமடைந்து ‘சூப்பர் எல் நினோ’வாக மாறும் போது, உலகளவில் மழைப்பொழிவு, வறட்சி, கடுமையான வெப்ப அலை மற்றும் எதிர்பாராத கனமழை போன்ற தீவிர வானிலை மாற்றங்கள் ஏற்படுகின்றன. சர்வதேசக் காலநிலை மற்றும் சுகாதார அமைப்புகள் இணைந்து நடத்திய புதிய ஆய்வில், இத்தகைய தீவிர வானிலை மாற்றங்கள் மனித ஆரோக்கியத்திற்கும் வாழ்வாதாரத்திற்கும் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்த ஆய்வறிக்கையின் படி, ஆப்பிரிக்கா, தெற்கு ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஏற்படா வறட்சியால் உணவுப் பற்றாக்குறை, குடிநீர் தட்டுப்பாடு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு போன்றவை அதிகரிக்கும். இந்தியாவில் வழக்கத்திற்கு மாறான வெப்ப அலை மற்றும் பருவமழைப் பொழிவில் ஏற்படும் சீரற்ற தன்மையால் விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்படுவதுடன், வெப்பம் தொடர்பான நோய்களால் சுமார் 16,000 பேர் வரை உயிரிழக்கும் அபாயம் உள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
சூப்பர் எல் நினோவின் தீவிரம் உலகளாவியப் பொருளாதாரத்திற்கும், முக்கியமாக ஏழை மற்றும் வளரும் நாடுகளின் சுகாதாரக் கட்டமைப்புக்கும் பலத்த சேதத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே, சர்வதேச நாடுகள் உடனடியாக இணைந்து பசுமை இல்ல வாயு உமிழ்வைக் குறைப்பதோடு, வறட்சி மற்றும் வெள்ளப் பாதிப்புகளை எதிர்கொள்ளத் தேவையான அவசரகாலத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் எனச் சர்வதேச விஞ்ஞானிகள் வலியுறுத்தியுள்ளனர்.