ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் ‘நன்னடத்தை அமைச்சகம்’ (Ministry of Vice and Virtue) மற்றும் காவல் துறையினர், இஸ்லாமிய ஆடை விதிகளை மீறியதாகக் கூறிப் பெண்களை வீதிகளிலேயே வைத்துக் கடுமையாகத் தாக்கி, காரில் பலவந்தமாக ஏற்றிச் செல்லும் கொடூரக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்வதேச அளவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
தலைநகர் காபூல் மற்றும் ஹெராட் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கடந்த சில நாட்களாகத் தாலிபான்களின் நன்னடத்தைக் காவல்துறையினர் தீவிரக் கண்காணிப்பு மற்றும் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். முகத்தை மறைக்கும் பர்தா அல்லது ஹிஜாப் அணியாமல் உள்ளூர் ஆடை (Manto) அணிந்து வெளிவந்த பெண்கள் மற்றும் மாணவிகளைச் சூழ்ந்துகொண்ட அதிகாரிகள், அவர்களைத் தடிகளாலும் சாட்டைகளாலும் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் கர்ப்பிணிப் பெண் உட்படக் குறைந்தது 20 பெண்கள் கைது செய்யப்பட்டுத் தெரியாத இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது முதல் பெண்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொது இடங்களுக்கு வரக் கடுமையான தடைகள் விதிக்கப்பட்டு வருகின்றன. தற்போது ‘முறையற்ற ஹிஜாப்’ என்ற பெயரில் காவல்துறையினர் பெண்களைப் பிடித்துச் செல்வதுடன், அவர்களை விடுவிக்கக் குடும்பத்தாரிடமிருந்து பெரும் தொகையைப் பிணைப் பணமாகக் கோருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பெண்களின் அடிப்படை உரிமைகள் இப்படி வீதியிலேயே பறிக்கப்படுவதற்கு எதிராக காபூலில் சில இடங்களில் பெண்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாலிபான்களின் இந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் பெண்கள் மீதான வன்முறைக்கு ஐக்கிய நாடுகள் சபை (UN) மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. உடனடியாகக் கைது செய்யப்பட்ட அனைத்துப் பெண்களையும் எவ்வித நிபந்தனையுமின்றி விடுவிக்க வேண்டும் என்றும், ஆப்கான் பெண்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கச் சர்வதேச சமூகம் தலையிட வேண்டும் என்றும் மனித உரிமை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.