பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான சான்றிதழ்கள் மற்றும் பல்வேறு அரசு சேவைகளைப் பெற அரசு அலுவலகங்களுக்கு அலைவதைத் தவிர்க்கும் நோக்கில், தமிழ்நாடு மின் ஆளுமை முகமை (TNeGA) மூலமாக “நம்ம அரசு” (Namma Arasu) என்ற புதிய வாட்ஸ்அப் சாட்பாட் (WhatsApp Chatbot) சேவையைத் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. ‘நம்ம அரசு… நம்ம கையில்…’ என்ற முழக்கத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த அதிநவீன வசதி மூலம், பொதுமக்கள் தங்களின் செல்போனில் இருந்தபடியே ஒரே ஒரு வாட்ஸ்அப் செய்தி மூலமாகப் பல்வேறு துறைகளின் சேவைகளை மிக எளிதாகப் பெற முடியும். ஆரம்பத்தில் 51 சேவைகளுடன் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், தற்போது 66 அத்தியாவசிய அரசு சேவைகளாக விரிவுபடுத்தப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த புதிய வசதியைப் பயன்படுத்த பொதுமக்கள் தங்களது செல்போனில் +91 78452 52525 என்ற அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் எண்ணைச் சேமித்துக் கொள்ள வேண்டும் பின்னர் அந்த எண்ணிற்கு வாட்ஸ்அப்பில் ‘Hi’ அல்லது ‘வணக்கம்’ என்று செய்தி அனுப்பினால், சாட்பாட் உடனடியாகச் செயல்பட்டுத் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் சேவைகளுக்கான பட்டியலை வழங்கும். தங்களுக்குத் தேவையான சேவையைத் தேர்ந்தெடுத்து, கேட்கப்படும் விவரங்களை உள்ளிடுவதன் மூலம் நிமிடங்களில் சேவைகளைப் பெற முடியும். இந்தச் சேவை முற்றிலும் பாதுகாப்பானது என்றும், 24 மணி நேரமும் பொதுமக்கள் இதைப் பயன்படுத்தலாம் என்றும் தகவல் தொழில்நுட்பத் துறை தெரிவித்துள்ளது.
இந்த ‘நம்ம அரசு’ வாட்ஸ்அப் சாட்பாட் மூலம் வருவாய்த்துறை, சமூக நலத்துறை, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு முக்கியத் துறைகளின் சேவைகளை ஒருங்கிணைத்து வழங்கியுள்ளனர். குறிப்பாக, இருப்பிடச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் போன்ற அத்தியாவசியச் சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்தல் (Certificate Downloads), சொத்து வரி, குடிநீர் வரி போன்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வரிகளைச் செலுத்துதல் (Utility and Tax Bill Payments) போன்ற வசதிகள் இதில் அடங்கும். மேலும், அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு விண்ணப்பிப்பதுடன், தங்களின் குறைகளை ஆன்லைன் மூலம் மனுவாகப் பதிவு செய்யும் (Grievance Filing) வசதியும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் பரிணாம வளர்ச்சியில் முன்னணியில் இருக்கும் தமிழக அரசு, உமாஜின் டிஎன் (UmagineTN) மாநாட்டில் இந்தத் திட்டத்தை முறைப்படி தொடங்கி வைத்தது. கிராமப்புற மக்கள் மற்றும் இ-சேவை மையங்களுக்குச் செல்ல நேரமில்லாத உழைக்கும் வர்க்கத்தினருக்கு இந்த வாட்ஸ்அப் சேவை ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இடைத்தரகர்கள் இல்லாத, வெளிப்படையான மற்றும் ஊழலற்ற நிர்வாகத்தை அடித்தட்டு மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் இந்த ‘நம்ம அரசு’ செயலி மிக முக்கியப் பங்கு வகிக்கும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.