பிறந்து சில மாதங்களே ஆன ஒரு பிஞ்சு குழந்தை, உலகை விட்டு பிரியும் வேளையிலும் 3 குழந்தைகளின் வாழ்வில் ஒளியேற்றிவிட்டு சென்ற நெகிழ்ச்சியான சம்பவம் தமிழகத்தில் நடந்துள்ளது. 19 மாதங்களே (1.5 வயது) ஆன ‘கர்ணன்’ என்ற ஆண் குழந்தையின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு, மாற்று அறுவை சிகிச்சைக்காக வழங்கப்பட்டுள்ளன. தமிழக மருத்துவ வரலாற்றிலேயே இவ்வளவு குறைந்த வயதில் குழந்தை ஒன்றின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டது இதுவே முதன்முறையாகும்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் (RGGGH), பிறவிக் குறைபாடான ஹைட்ரோசெபாலஸ் (Hydrocephalus – மூளைத் தண்டுவட நீர் தேங்கும் பாதிப்பு) நோயால் பாதிக்கப்பட்ட இக்குழந்தை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தது. மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி குழந்தை மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்தத் துயரமான சூழலிலும், குழந்தையின் பெற்றோர்கள் பெருந்தன்மையுடன் முன்வந்து குழந்தையின் உறுப்புகளை தானம் செய்ய ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் (TRANSTAN) வழிகாட்டுதலின்படி, குழந்தையின் இதயம் மற்றும் சிறுநீரகங்கள் உள்ளிட்ட முக்கிய உறுப்புகள் வெற்றிகரமாக பெறப்பட்டன. இந்த உறுப்புகள் மூலம் தீவிர உடல்நலப் பாதிப்பால் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 3 குழந்தைகளுக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. தங்களது பிஞ்சுக் குழந்தையின் பிரிவால் துடித்துக்கொண்டிருந்த பெற்றோர், மற்ற குழந்தைகளின் சிரிப்பில் தங்கள் குழந்தையைக் காணும் நோக்கில் எடுத்த இந்த உன்னதமான முடிவு அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
சட்டப்பூர்வ மரியாதைகளுடன் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் குழந்தையின் உடலுக்கு இறுதி அஞ்சலி மற்றும் மரியாதை செலுத்தப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. தமிழக அரசு மற்றும் மருத்துவத்துறை சார்பில் குழந்தையின் பெற்றோருக்கு ஆழ்ந்த இரங்கலும், இந்த உன்னதமான தியாகத்தைப் பாராட்டி நன்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தானத்தில் சிறந்த தானம் உறுப்பு தானம் என்பதை உலகிற்கு உணர்த்திவிட்டு அமரனாக வாழ்ந்து கொண்டிருக்கிறது அந்தச் சின்னஞ்சிறு குழந்தை கர்ணன்