Posted in

டாஸ்மாக் கடைகளில் குறுஞ்செய்தி நடைமுறை ரத்து: நவம்பர் 1 முதல் கணினியில் விவரங்கள் பதிவேற்றம்!

தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளில் தினசரி விற்பனை மற்றும் சரக்கு இருப்பு விவரங்களை எஸ்.எம்.எஸ் (SMS) மூலம் அனுப்பும் பழைய நடைமுறை வரும் நவம்பர் 1-ஆம் தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் நந்தகுமார் இது தொடர்பாக அனைத்து மண்டல மற்றும் மாவட்ட மேலாளர்களுக்குச் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். டாஸ்மாக் நிர்வாகம் முழுமையாகக் கணினிமயமாக்கப்பட்டு நவீன அமைப்பிற்கு மாற உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கணினி முறையின் மூலம் ஒவ்வொரு கடைகளின் விற்பனை மற்றும் இருப்பில் உள்ள சரக்குகள் குறித்த விவரங்கள் நொடிக்கு நொடி துல்லியமாகத் தலைமையகத்திற்குக் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பணியாளர்கள் தினமும் கடை முடிந்த பிறகு தனியாகக் குறுஞ்செய்தி அனுப்பும் பணிச் சுமை குறையும். மேலும் மனிதத் தவறுகள் தவிர்க்கப்பட்டு, கையாடல் அல்லது முறைகேடுகள் நடக்காத வகையில் இந்த டிஜிட்டல் முறை அமையும் என டாஸ்மாக் நிர்வாகம் கூறியுள்ளது.

கணினிமயமாக்கல் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், அனைத்து சில்லறை விற்பனைக் கடைகளிலும் புதிய நடைமுறை தீவிரமாகக் கண்காணிக்கப்படவுள்ளது.

நவம்பர் 1 முதல் அமலுக்கு வரும் இந்த மாற்றத்தின் மூலம் டாஸ்மாக் நிர்வாகத்தின் வெளிப்படைத்தன்மை மேலும் அதிகரிக்கும் எனக் எதிர்பார்க்கப்படுகிறது.