Posted in

நீங்க தவெக தானே? – தென்காசி கலெக்டரை கட்சி நிர்வாகி என நினைத்து அலறவிட்ட குடிமகன்! சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் வீடியோ!

தென்காசி மாவட்டத்தில் அரசு திட்டங்களை ஆய்வு செய்யச் சென்ற மாவட்ட ஆட்சியர் (Collector) ரஞ்சித் சிங்கை, ஆளுங்கட்சியான தவெக-வின் (தமிழக வெற்றிக் கழகம்) மாவட்ட நிர்வாகி எனத் தவறாக நினைத்து போதை வாலிபர் ஒருவர் செய்த ரகளை சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது. “நீங்கள் தவெக கட்சி ஆளுதானே?” என அந்த வாலிபர் நேரடியாகக் கலெக்டரிடமே கேள்வி எழுப்ப, அருகில் இருந்த அதிகாரிகள் மற்றும் போலீசார் பதறிப்போய் அவரை அப்புறப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசின் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், தென்காசி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் ஐஏஎஸ் கடையநல்லூர் தாலுகா மற்றும் புளியங்குடி நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் அதிரடி ஆய்வுகளை மேற்கொண்டார். புளியங்குடி புதிய பேருந்து நிலையத்தில் உள்ள நகராட்சி சுகாதார வளாகத்தை ஆய்வு செய்த அவர், அங்கு தூய்மைப் பணிகள் சரியாக உள்ளதா என்றும், பொதுமக்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்றும் நேரடியாகப் பார்வையிட்டார். அப்போது, அங்கு வந்த குடிபோதையில் இருந்த நபர் ஒருவர் திடீரென கலெக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடத் தொடங்கினார்.

கலெக்டர் என்று கூடத் தெரியாமல், “இங்கு கழிவறைக்கு 5 ரூபாய்க்குப் பதில் 10 ரூபாய் வசூலிக்கிறார்கள். பொதுமக்களாகிய எங்களிடம் உங்களால் கேட்க முடியுமா?” என அந்த நபர் தொடர்ந்து சத்தமாகத் தர்க்கம் செய்தார். அங்கிருந்த அதிகாரிகள் அவரைத் தடுக்க முயன்றபோது, “நான் பப்ளிக் (Public), உங்களிடம் கேள்வி கேட்பேன்” என்று முழங்கிய அவர், திடீரென கலெக்டர் ரஞ்சித் சிங்கை உற்றுப் பார்த்து, “ஏங்க… நீங்க தவெக (TVK) கட்சி நிர்வாகி தானே?” என்று ஒரு போடு போட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், “அடப்பாவி… இவர் தவெக காரர் இல்லப்பா, நம்ம மாவட்ட கலெக்டர்யா!” என்று உலுக்கிக் கூறியுள்ளனர்.

உடனடியாக சுதாரித்துக் கொண்ட அந்த நபர், “ஓ… அப்படியா சார்!” என அப்படியே ஆஃப் ஆகி அமைதியாக நின்றார். இந்த முழுச் சம்பவத்தையும் அங்கிருந்த பொதுமக்கள் சிலர் தங்களது செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட, அது தற்போது இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. தவெக அரசு அமைந்த பிறகு கட்சிப் பொறுப்பாளர்களும், அமைச்சர்களும் அரசு அலுவலகங்களில் தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு வருவதால், அரசு அதிகாரிகளையும் தவெக பிரமுகர்கள் என்றே பொதுமக்கள் தவறாக நினைக்கும் அளவிற்குத் தமிழகத்தில் தற்போதைய சூழல் நிலவி வருவதாக எதிர்க்கட்சியினர் இந்த வீடியோவை வைத்து விமர்சித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *