தமிழக அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன்’ திட்டத்திற்காக, செய்கூலி, சேதாரம் எதுவுமின்றி வெறும் 1 பைசா கட்டணத்தில் தங்க மோதிரங்களைத் தயாரித்து வழங்க முன்னணி நகை நிறுவனங்களான ஜாய் ஆலுக்காஸ் மற்றும் கல்யாண் ஜுவல்லர்ஸ் ஒப்பந்தம் செய்துள்ளதன் பின்னணியில் மாபெரும் ‘பிராண்டிங்’ மற்றும் வர்த்தக உத்தி ஒளிந்திருப்பது தெரியவந்துள்ளது.
தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் (TNMSC) நடத்திய ஆன்லைன் டெண்டரில் 11 முன்னணி நிறுவனங்கள் பங்கேற்றன. அரசு வழங்கும் தங்கத்தின் சந்தை மதிப்பைத் தவிர்த்து, தயாரிப்பு, ஹால்மார்க் முத்திரை, காப்பீடு மற்றும் பேக்கிங் செலவுகள் அனைத்திற்கும் சேர்த்து ஜாய் ஆலுக்காஸ் 1 பைசா மட்டுமே கட்டணமாகக் குறிப்பிட்டு முதலிடத்தைப் பிடித்தது. தொடர்ந்து, இதே நிபந்தனைக்குக் கல்யாண் ஜுவல்லர்ஸ் சம்மதித்ததால், இரு நிறுவனங்களுக்கும் 70:30 என்ற விகிதத்தில் 89,950 மோதிரங்களை முதற்கட்டமாகத் தயாரித்து வழங்கும் பணியாணை வழங்கப்பட்டுள்ளது.
வெளிப்பார்வைக்கு இது நஷ்டம் தருவது போல் தோன்றினாலும், கார்ப்பரேட் உலகில் இது ‘லாஸ் லீடர் மார்க்கெட்டிங்’ (Loss Leader Marketing) மற்றும் ‘லைஃப்டைம் கஸ்டமர் வேல்யூ’ (Lifetime Customer Value) என்றழைக்கப்படும் பிரம்மாண்ட வர்த்தக உத்தியாகும். தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமான ஏழை, நடுத்தரக் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் படத்துடன் கூடிய அட்டையில் இந்நிறுவனங்களின் பெயர்கள் நேரடியாகச் சென்றடைகின்றன. ஆண்டுக்கு ரூ.300 கோடி முதல் ரூ.500 கோடி வரை விளம்பரத்திற்காகச் செலவிடும் இந்நிறுவனங்களுக்கு, இத்திட்டம் மூலம் ரூ.100 கோடி வரையிலான விளம்பரச் செலவு மிச்சமாகிறது.
மேலும், பண்டிகை மற்றும் முகூர்த்த காலங்கள் தவிர்த்து மற்ற மந்தமான நாட்களில், அரசு திட்டத்தின் மூலம் தங்க சுத்திகரிப்பு ஆலைகளும் பணியாளர்களும் தொடர்ந்து இயங்க வாய்ப்பு ஏற்படுகிறது. தமிழகத்தின் ரூ.55,000 கோடி ஆபரணத் தங்கச் சந்தையில், வாடிக்கையாளர்களின் உணர்வுகளோடு கலந்து நன்மதிப்பைப் பெறுவதன் மூலம் தங்களது சில்லறை விற்பனையை 4% முதல் 6% வரை உயர்த்த முடியும் என்பதால், சமூகப் பொறுப்புணர்வு என்ற போர்வையில் இந்நிறுவனங்கள் சாதுரியமான சந்தை வெற்றியைப் பதிவு செய்துள்ளன.