தமிழ்நாடு சட்டப்பேரவையின் மானியக் கோரிக்கை விவாதத்தின் போது, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு, ஊட்டச்சத்து மேம்பாடு, பெண்களின் சுயசார்பு மற்றும் மூத்த குடிமக்களின் பராமரிப்புக்காக 21 புதிய திட்டங்கள் மற்றும் முக்கிய அறிவிப்புகளை அமைச்சர் கே. ஜெகதீஸ்வரி பேரவையில் முறைப்படி தாக்கல் செய்தார். குழந்தை மையங்கள் மேம்பாடு முதல் மூத்த குடிமக்களுக்கான ஒருங்கிணைந்த மையங்கள் வரை பல கோடி ரூபாய் மதிப்பிலான புதிய நிதி ஒதுக்கீடுகளை உள்ளடக்கி இந்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
குழந்தைகள் நலனுக்கான அறிவிப்புகளில், நகர்ப்புறங்களில் 300 புதிய குழந்தை மையக் கட்டடங்கள் ரூ.51 கோடியில் கட்டப்படும் என்றும், கல்நார் கூரையுடைய 1,662 மையங்களுக்கு ரூ.66.48 கோடியில் வெப்பத்தை குறைக்கும் PU நுரைத் தகடு கூரைகள் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இரத்த சோகை (அனீமியா) பாதிப்பைத் தடுக்க முதற்கட்டமாக 12 மாவட்டங்களில் உள்ள 5,502 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ரூ.38 கோடியில் கூடுதல் ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்படும் என்றும், குழந்தைகளுக்கான அவசர உதவி எண் (1098) சேவைகள் மற்றும் போக்சோ போர்ட்டல் 2.1 (POCSO Portal 2.1) மேம்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூத்த குடிமக்கள் மற்றும் திருநங்கைகளின் நலன் காக்கும் வகையில், மூத்த குடிமக்களின் ஓய்வுகாலம் மற்றும் மருத்துவப் பராமரிப்பிற்காக அரசு-தனியார் பங்களிப்புடன் (PPP) ரூ.14.50 கோடியில் குடியிருப்புகள், அனைத்து மாவட்டங்களிலும் ஒருங்கிணைந்த சேவை மையங்கள் மற்றும் ‘நல்வாழ்வு களஞ்சியம்’ தரவுத்தளம் அமைக்கப்படும். அத்துடன், திருநங்கைகளுக்கு அனைத்துச் சேவைகளும் ஒரே இடத்தில் கிடைக்க ஒற்றைச் சாளர இணையதளம் மற்றும் வட்ட அளவிலான குறைகேட்கும் குழுக்கள் உருவாக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும், போதைப்பழக்கத்திலிருந்து மீட்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு சேவைகள் ரூ.3.80 கோடியிலும், குழந்தைகள் காப்பகங்களுக்கான தரவுத்தள நிர்வாக அமைப்பு ரூ.10 லட்சத்திலும் செயல்படுத்தப்படவுள்ளது. குழந்தைகளின் கல்வித் தரம், ஊட்டச்சத்து மற்றும் முதியோர்களின் வாழ்வாதாரத்தை ஒருசேர உயர்த்துவதை இலக்காகக் கொண்டு அமைச்சர் ஜெகதீஸ்வரி வெளியிட்ட இந்த 21 புதிய அறிவிப்புகள் சட்டப்பேரவையில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.