Posted in

அரசு வழக்கறிஞர் பதவிக்கு ரூ.15 லட்சம் பேரம்: லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

கன்னியாகுமரி மாவட்ட நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட பல லட்ச ரூபாய் லஞ்சப் பேரம் பேசப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரியைச் சேர்ந்த ஜெகன்ராஜ் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. அரசு வழக்கறிஞர் பதவிக்காக ரூ.15 லட்சம் வரை லஞ்சம் கேட்கப்பட்டதாக வெளியான தொலைபேசி ஆடியோ ஆதாரமாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்ட நீதிமன்றத்தில் பணியாற்றும் பெண் வழக்கறிஞர் ஒருவரிடம், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாவட்டச் செயற்குழு உறுப்பினராக இருந்த அனீஸ் என்பவர் அரசு வழக்கறிஞர் பதவி வாங்கித் தருவதாகக் கூறி ரூ.15 லட்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. பெண் வழக்கறிஞர் என்பதால் ரூ.2 லட்சம் வரை குறைத்து ரூ.12 லட்சம் தருமாறு பேரம் பேசிய ஆடியோ பதிவை அந்த பெண் வழக்கறிஞர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்ததை அடுத்து இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இந்த விவகாரம் பூதாகரமானதைத் தொடர்ந்து, அனீஸ் தனது கட்சிப் பொறுப்பிலிருந்து அவசர அவசரமாக நீக்கப்பட்டார்.

இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி முருகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, அரசு வழக்கறிஞர் பணியைப் பணத்திற்காக விற்பனை செய்ய முயன்றது யார் எனக் கடுமையாகக் கேள்வி எழுப்பப்பட்டது. மேலும் லஞ்சம் பெறுவது மட்டுமின்றி லஞ்சம் கொடுப்பதும் குற்றமே எனக் குறிப்பிட்ட நீதிபதி, லஞ்சம் கேட்டவர் மற்றும் லஞ்சம் கொடுத்துப் பதவி பெற முயன்றவர்கள் என இரு தரப்பினர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தத் தவறியது ஏன் எனக் கேள்வி எழுப்பினார்.

நீதிமன்ற அமைப்பின் நம்பகத்தன்மையைக் காக்கும் வகையில், இந்தப் புகார் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை உரிய விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார். அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் இதுபோன்ற முறைகேடுகள் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத் துறை தனது முதற்கட்ட விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.