Posted in

தமிழக ஊரக வளர்ச்சித் துறை கணக்குகளில் ரூ.22.10 கோடி சைபர் மோசடி: விசாரணை தீவிர வீச்சு!

தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் உள்ள பல்வேறு ஊராட்சி ஒன்றியங்களின் வங்கி கணக்குகளிலிருந்து ரூ.22.10 கோடி ஆன்லைன் வாயிலாக மோசடி செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி முறைகேடு தொடர்பாகச் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 15-வது நிதிக்குழு மானியம் மற்றும் ஊராட்சிப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து இந்தத் தொகை முறைகேடாகப் பெறப்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியத்தின் கணக்கிலிருந்து ரூ.14 கோடியும், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்திலிருந்து ரூ.5 கோடியும், நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியத்திலிருந்து ரூ.3.10 கோடியும் எடுக்கப்பட்டுள்ளன. ஊராட்சி செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் நிதியைப் பரிவர்த்தனை செய்யப் பயன்படுத்தும் பிரத்யேக இணையதளப் பாதுகாப்பு அம்சங்களை ஊடுருவி, அதிகாரிகளின் லாகின் விவரங்களைக் கைப்பற்றி போலி கணக்குகளுக்கு நிதியை மாற்றியுள்ளனர். இதில் தொடர்புடைய உள்நாட்டைச் சேர்ந்த இடைத்தரகர்களான சிராஜூதீன் மனைவி பசிரியா மற்றும் முகமது ஹஜாநஜூபுதீன் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மின்னஞ்சல் மற்றும் ஐபி முகவரிகளை ஆய்வு செய்தபோது பங்களாதேஷ், அமெரிக்கா மற்றும் கிரீஸ் போன்ற வெளிநாடுகளிலிருந்து ஊடுருவல் நடத்தப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் சர்வதேச அளவிலான நைஜீரிய சைபர் குற்றக் கும்பல் செயல்பட்டிருக்கலாம் என்றும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். ஏற்கனவே புதுச்சேரியில் அரசு மருத்துவக் கல்லூரி கணக்கில் இதே போன்ற மோசடி நடந்த நிலையில், தமிழக அரசு கணக்கிலும் நிதி சுருட்டப்பட்டிருப்பது இணையதளப் பாதுகாப்பு குறித்துக் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது மோசடி செய்யப்பட்ட பணம் எந்தெந்த வங்கி கணக்குகளுக்குச் சென்றது என்பதைப் புலனாய்வு செய்து, அந்த கணக்குகளை முடக்கும் நடவடிக்கைகளைச் சைபர் கிரைம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

வங்கிக் கணக்குகளை நிர்வகித்த அதிகாரிகள் மற்றும் தொடர்புடைய வங்கி ஊழியர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது