தமிழக அரசு வழக்கறிஞர்கள் (Government Law Officers) நியமனத்தில் தமக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை எனக் கூறி, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் தற்போதைய முதலமைச்சருமான சி. ஜோசப் விஜய், கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் விழுப்புரம் மாவட்டச் செயலாளர் மோகன்ராஜ் ஆகியோருக்கு எதிராகத் தவெக பெண் வழக்கறிஞர் எம். ஞானசௌந்தரி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. “ஊடகங்களின் தலைப்புச் செய்திகளில் இடம் பிடிப்பதற்காகவே (To hit the headlines) தேவையின்றி முதலமைச்சர் மற்றும் தவெக கட்சித் தலைவர்களின் பெயர்கள் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளன” என்று சுட்டிக்காட்டிய நீதிமன்றம், அவர்களின் பெயர்களை மனுவிலிருந்து உடனடியாக நீக்க உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தவெக பெண் வழக்கறிஞரான ஞானசௌந்தரி, அம்மாநிலத்தின் மகிளா நீதிமன்ற சிறப்பு அரசு வழக்கறிஞர் மற்றும் முதன்மை சார்பு நீதிமன்ற கூடுதல் அரசு வழக்கறிஞர் ஆகிய பணியிடங்களுக்குத் தான் விண்ணப்பித்திருந்ததாகக் குறிப்பிட்டிருந்தார். ஆனால், தற்காலிக அடிப்படையில் 6 மாத காலத்திற்கு அரசு சட்ட அதிகாரிகளை நியமித்த போது, தவெக கட்சியைச் சேர்ந்த தனக்குப் பதவி வழங்காமல், திமுக மற்றும் அதிமுக வழக்கறிஞர்களுக்குத் தற்காலிகப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறி, அதற்குத் தனது கட்சித் தலைமையான முதல்வர் விஜய் மற்றும் புஸ்ஸி ஆனந்த் ஆகியோரே காரணம் எனத் தன் மனுவில் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி முகமது ஷஃபிக் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், மாநிலம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் வந்துள்ளதால் வழக்கமான நியமனங்களைச் செய்வதில் தாமதம் ஏற்பட்டது; எனவே நீதிமன்றப் பணிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே தற்காலிக நியமனங்கள் செய்யப்பட்டன என விளக்கமளித்தார். மேலும், மனுதாரரின் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தின் ஆலோசனையை ஏற்று, முதல்வர் விஜய், அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட மூவரின் பெயர்களையும் வழக்கிலிருந்து திரும்பப் பெற சம்மதித்தார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, அவர்களின் பெயர்களை நீக்கியதோடு, மனுதாரரின் விண்ணப்பத்தையும் தகுதியின் அடிப்படையில் பரிசீலிக்குமாறு சட்டத்துறைச் செயலருக்கு உத்தரவிட்டு வழக்கைத் முடித்து வைத்தார்.
உயர் நீதிமன்றத்தின் இந்த அதிரடித் தீர்ப்பைத் தொடர்ந்து, கட்சித் தலைமைக்கு எதிராகவும், குறிப்பாக முதலமைச்சர் விஜய் மீதே நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தவெக-விற்குப் பெரும் அவப்பெயரையும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியதாகக் கூறி, வழக்கறிஞர் ஞானசௌந்தரியைக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும், அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தவெக தலைமை அதிரடியாக நீக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அரசுப் பதவிகள் கிடைக்காத விரக்தியில் சொந்தக் கட்சித் தலைமைக்கு எதிராகவே நீதிமன்றப் படியேறிய பெண் நிர்வாகியின் இந்தச் செயல், விழுப்புரம் மாவட்டத் தவெக மற்றும் அரசியல் வட்டாரங்களில் தற்பொழுது பெரும் பரபரப்பான விவாதப் பொருளாக மாறியுள்ளது.