Posted in

நேற்று சரத் வீடியோ, இன்று ஜெகதீஸ்வரி விவகாரம்: சர்ச்சையில் தவெக அமைச்சர்கள்- முதல்வர் விஜய் ‘Full Stop’ வைப்பாரா?

தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக (தவெக) ஆட்சியில், அடுத்தடுத்து அரங்கேறி வரும் அமைச்சர்களின் சர்ச்சையான சம்பவங்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சில தினங்களுக்கு முன்பு மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் டி. சரத்குமார், ஐபிஎல் போட்டியின் போது போதைப்பொருள் பயன்படுத்துவது போன்ற பழைய வீடியோ ஒன்று வெளியாகி கடுமையான விவாதங்களைக் கிளப்பியது. தன் குழந்தைக்கு மாத்திரை நசுக்கியதாக அவர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்ட போதிலும், எதிர்க்கட்சியான திமுக இந்த விவகாரத்தைக் கையில் எடுத்து, அவரைப் பதவி நீக்கம் செய்யக் கோரி மாநிலம் தழுவிய போராட்டங்களை அறிவித்து அழுத்தம் கொடுத்து வருகிறது.

சரத்குமார் விவகாரத்தின் சூடே இன்னும் தணியாத நிலையில், தற்போது சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கே. ஜெகதீஸ்வரி மற்றும் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா ஆகிய இருவருக்கும் இடையேயான உட்கட்சி மோதல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்த இரு பெண் அமைச்சர்களுக்கும் இடையே நீண்ட நாட்களாகவே கோஷ்டி பூசல் நிலவி வருவதாகக் கூறப்படும் நிலையில், அண்மையில் விருதுநகரில் நடந்த அரசு விழாவின் பேனரில் யாருடைய பெயர் முதலில் இடம் பெற வேண்டும் என்பது தொடர்பாக மேடையிலேயே அதிகாரிகளுடன் அமைச்சர் ஜெகதீஸ்வரி வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தத் தொடர் சலசலப்புகளுக்குப் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, சென்னையில் முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்ற அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டின் போது இரு அமைச்சர்களும் நேரில் சந்தித்துக் கொண்டனர். அப்போது தங்களுக்குள் எந்தப் பகையும் இல்லை என்பதைக் காட்டுவதற்காக இருவரும் ஒன்றாகச் சிரித்தபடி ‘செல்ஃபி’ புகைப்படம் எடுத்து, அதனை தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்துள்ளனர். “கட்டுக்கதைகளை ஒற்றை புன்னகையால் உடைத்தெறிவோம்” என அவர்கள் பதிவிட்டிருந்தாலும், விருதுநகர் மாவட்ட உள்ளூர் அரசியல் வட்டாரத்தில் இந்தத் தற்காலிக சமாதானம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்ற கேள்விகள் எழுந்தவண்ணம் உள்ளன.

மின்வெட்டுப் புகார்கள், போதைப்பொருள் குற்றச்சாட்டுகள் மற்றும் அமைச்சர்களின் வெளிப்படையான கோஷ்டி மோதல்களால் தவெக அரசு கடுமையான நிர்வாக ரீதியான மற்றும் அரசியல் ரீதியான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தவெக தலைமை ஏற்கனவே எச்சரித்துள்ள நிலையில், கட்சியின் நற்பெயரைக் காக்கவும், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் முதல்வர் விஜய் இந்த விவகாரங்களில் அதிரடியாகத் தலையிட்டு ‘Full Stop’ வைப்பாரா என்பதை ஒட்டுமொத்த தமிழக அரசியல் களமும் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது.