Posted in

விஜய்யின் சுறா பட நகைச்சுவைக் காட்சி – இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து கிண்டலடித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி!

தமிழகச் சட்டப்பேரவையில் ஆளுங்கட்சியான தவெக-விற்கும் எதிர்க்கட்சியான திமுகவிற்கும் இடையே காரசாரமான அரசியல் மோதல்கள் முற்றியுள்ள நிலையில், முதலமைச்சர் விஜய்யின் ‘சுறா’ பட நகைச்சுவைக் காட்சி ஒன்றை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ள சம்பவம் இணையத்தில் தீயாகப் பரவி வருகிறது.

தமிழகச் சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் சி.ஜோசப் விஜய், கடந்த கால திமுக ஆட்சியின் ஊழல்கள் மற்றும் தலைவர்கள் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். இதற்குப் பதிலளிக்க முயன்ற எதிர்க்கட்சிகளுக்குச் சபாநாயகர் வாய்ப்பு மறுத்ததால், அவையிலேயே தர்ணாவில் ஈடுபட்ட திமுக எம்.எல்.ஏ-க்கள் பின்னர் வெளிநடப்பு செய்தனர். பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த உதயநிதி ஸ்டாலின், “முதலமைச்சர் விஜய் ஆதாரமே இல்லாமல் சினிமா சூட்டிங் டயலாக் போலப் பேசுகிறார்” எனக் கடுமையாகச் சாடினார்.

செய்தியாளர் சந்திப்பைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தின் ஸ்டோரியில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், முதலமைச்சர் விஜய் கதாநாயகனாக நடித்த ‘சுறா’ திரைப்படத்தில் வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சி ஒன்று இடம் பெற்றிருந்தது. சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் பேசிய ஆதாரமற்ற உரையை மறைமுகமாகக் கேலி செய்யும் நோக்கில், இந்த சுறா பட நகைச்சுவைக் காட்சியை உதயநிதி பகிர்ந்துள்ளதாகக் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

சட்டப்பேரவையில் தவெக அரசுக்கும் திமுகவிற்கும் இடையே நேரடி விவாதங்கள் சூடுபிடித்துள்ள சூழலில், முதலமைச்சர் விஜய்யின் திரைப்படக் காட்சியையே ஆயுதமாகப் பயன்படுத்தி உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட இந்த இன்ஸ்டா பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. திமுக மற்றும் தவெக தொண்டர்கள் இருதரப்பிலும் இந்த பதிவைப் பகிர்ந்து காரசாரமான கருத்துகளைப் பரிமாறி வருவதால் தமிழக அரசியல் களம் மேலும் சூடடைந்துள்ளது.