Posted in

டம்மி முதலமைச்சர், ரீல்ஸ் ஆட்சி! – வண்டலூர் அரசுப் பள்ளி சம்பவத்தால் கொதித்தெழுந்த உதயநிதி..

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே அரசுப் பள்ளி வளாகத்திற்குள் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், “தமிழகத்தில் நடப்பது ரீல்ஸ் ஆட்சி; முதலமைச்சராக இருப்பவர் வெறும் டம்மி” என்று திமுக இளைஞரணிச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மிகக் கடுமையான கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.

வண்டலூர் அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவர், பள்ளி நேரத்தின் போது கழிப்பறைக்குச் சென்றபோது பள்ளி வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்த மர்ம நபர் அவரைத் தாக்கி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதில் மயங்கி விழுந்த மாணவியை மீட்டப் பள்ளி ஊழியர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பள்ளி வளாகத்திலேயே மாணவிக்கு இத்தகைய அசம்பாவிதம் நிகழ்ந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் குறித்து விரிவான அறிக்கை வெளியிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின், “அரசுப் பள்ளி வளாகத்திற்குள்ளேயே மாணவிகளுக்குப் பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவது கடும் கண்டனத்திற்குரியது. அரசுப் பள்ளிகளில் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறிய இந்த அரசு, விளம்பர அரசியலிலும் சமூக வலைதள ரீல்ஸ்களிலுமே அதிக கவனம் செலுத்துகிறது. முதலமைச்சராக இருப்பவர் சட்ட ஒழுங்கைக் கட்டுப்படுத்த முடியாமல் டம்மியாகச் செயல்படுகிறார்” எனக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

மேலும், பள்ளி மாணவியின் மீதான இத்தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளியை உடனடியாகக் கைது செய்து போக்சோ மற்றும் கடுமையான பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் சிசிடிவி கேமராக்கள் மற்றும் காவல்துறைப் பாதுகாப்பை உடனடியாகப் பலப்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.