Posted in

‘வியாழக்கிழமை’ என்றால் வெளியே வர அஞ்சும் பெண்கள்: பிரிட்டனில் கிளம்பிய புதிய சர்சை..

பிரித்தானியாவின் எஸெக்ஸ் (Essex) பிராந்தியத்தில் அமைந்துள்ள பிரேண்ட்ரீ (Braintree) நகரில், அருகிலுள்ள முன்னாள் ‘வெதர்ஸ்ஃபீல்ட்’ (Wethersfield) RAF விமானப் படைத் தளத்தில் தங்கியிருக்கும் நூற்றுக் கணக்கான ஆண் அகதிகள் வியாழக்கிழமைகளில் பேருந்துகள் மூலம் அழைத்து வரப்படுவதால், அன்றைய தினம் பெண்கள் பாதுகாப்பு கருதி வெளியே செல்வதைத் தவிர்க்கும் சூழல் உருவாகியுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
முன்னாள் ராணுவத் தளத்தில் அமைக்கப்பட்ட இந்த அகதிகள் முகாம் மூலம் சுமார் 1,245 பேருக்கான தங்குமிடம் வழங்கப்பட்டு வரும் நிலையில், அங்கிருந்து அழைத்து வரப்படும் இளைஞர்கள் கடைகள் மற்றும் மக்கள் நடமாட்டம் உள்ள பொது இடங்களில் கூட்டம் கூட்டமாக நடமாடுவதாக உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பள்ளிச் சிறுமிகளைப் பார்த்து சீண்டி விசில் அடிப்பதும், தனியாகச் செல்லும் பெண்களைத் தொடர்ந்து சென்று அச்சுறுத்துவதும் அதிகரித்து வருவதால், வியாழக்கிழமைகளில் அப்பகுதிப் பெண்கள் வெளியே வரவே அச்சப்படுவதாகத் தெரிவிக்கின்றனர்.
அதேவேளையில், இந்தச் சூழலைத் தீவிர வலதுசாரி அரசியல் அமைப்புகளும் தீவிரவாதிகளும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, மக்கள் மத்தியில் இன மற்றும் அகதிகளுக்கு எதிரான வெறுப்புணர்வைத் தூண்டிவிட்டு பதற்றத்தை ஏற்படுத்தி வருவதாகவும் ஊடக அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. இதனால் அமைதியான அந்தச் சிறிய நகரில் சமூக அமைதி சீர்குலைந்து, உள்ளூர் மக்களிடையே பெரும் கொந்தளிப்பும் அச்சமும் நிலவி வருகிறது.
பிரித்தானிய உள்துறை அமைச்சகம் (Home Office) வெளியிட்ட விளக்கத்தில், ராணுவத் தளங்களில் அமைக்கப்பட்டுள்ள அகதிகள் தங்குமிடங்கள் முற்றிலும் பாதுகாக்கப்பட்ட மற்றும் சுயமாகச் இயங்கக்கூடிய வசதிகளைக் கொண்ட அமைப்புகளாகப் பராமரிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளது. ஹோட்டல்களில் அகதிகளைத் தங்க வைப்பதற்குப் பதிலாக இதுவே நிதி ரீதியாகவும் பாதுகாப்பிலும் சிறந்த வழிமுறை என்று அரசு தரப்பில் கூறப்பட்டாலும், உள்ளூர் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கூடுதல் காவல் கண்காணிப்பு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.