Posted in

எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம் – பிரிட்டனுக்கு வரலாறு காணாத ஆபத்து எனப் பாதுகாப்புத் துறை எச்சரிக்கை!

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலக்கட்டத்தில் பிரிட்டன் நாடு தனது வரலாற்றிலேயே சந்திரிக்காத அளவுக்கு மிகக் கடுமையான போர் அபாயத்தையும் பாதுகாப்பு அச்சுறுத்தலையும் தற்போது எதிர்கொண்டுள்ளதாகப் பிரிட்டனின் பாதுகாப்புத் துறை மற்றும் ராணுவத் தலைமை எச்சரித்துள்ளது.

பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் ராணுவத் தலைவர்கள் கலந்துகொண்ட உயர்மட்ட பாதுகாப்பு மாநாட்டில் பேசிய ராணுவத் தலைமை அதிகாரி மற்றும் பாதுகாப்புச் செயலாளர்கள், நாட்டின் தற்போதைய பாதுகாப்புச் சூழல் குறித்த அதிர்ச்சித் தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர். தங்களது 35 ஆண்டு கால ராணுவ மற்றும் அரசியல் பணிக்காலத்தில் சந்தித்திராத மிக மோசமான போர் அபாயமான காலகட்டம் இதுவே என அவர்கள் கவலை தெரிவித்தனர்.

ரஷியா, உக்ரைன் மீது நடத்தி வரும் நீடித்த போர், ஐரோப்பிய வான்வெளி மற்றும் கடல் எல்லைப் பகுதிகளில் ரஷியப் படைகள் நடத்தி வரும் உளவு நடவடிக்கைகள், அத்துடன் மத்திய கிழக்கு மற்றும் விண்வெளித் துறையில் அதிகரித்து வரும் மோதல்களே பிரிட்டனுக்கு இந்த பெரும் அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளன. ரஷியாவின் இணையவழித் தாக்குதல்கள் (Cyber Attacks) மற்றும் சைபர் சீர்குலைவு நடவடிக்கைகள் நேட்டோ (NATO) படைகளின் பொறுமையைச் சோதித்து வருவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த இரு தசாப்தங்களாகக் குறுகிய காலப் போர்களுக்கு மட்டுமே பிரிட்டன் ராணுவம் தயாராகி வந்த நிலையில், தற்போது உக்ரைன் போரைப் போல நீண்ட காலம் நீடிக்கக்கூடிய பிரம்மாண்டமான போர்களுக்குத் தன்னைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதற்காகத் தற்காப்புப் படைகளின் தயார்நிலையை அதிவேகமாக உயர்த்தவும், ராணுவ பட்ஜெட்டை அதிகரிக்கவும் பிரிட்டன் அரசு திட்டமிட்டு வருகிறது.

பிரிட்டன் மக்கள் அனைவரும் வரவிருக்கும் சவால்களையும், சாத்தியமான போர்ச் சூழல்களையும் எதிர்கொள்ள உளவியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் தயாராக இருக்க வேண்டும் எனப் பாதுகாப்பு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். பிரிட்டன் பாதுகாப்புத் துறை விடுத்துள்ள இந்தத் தொடர் எச்சரிக்கைகள் ஐரோப்பிய நாடுகள் மற்றும் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.