Posted in

அதிமுகவின் ரத்தத்தின் ரத்தங்களை நோக்கி விஜய் வலை; தாராபுரம் பிரச்சாரத்தில் வெடிக்கப்போகும் அரசியல் ஆட்டம்!

தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் இன்று தாராபுரத்தில் தீவிரப் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அதிமுகவின் பாரம்பரிய வாக்குகளைத் தன்வசம் இழுக்கும் வகையில் அவரது உரை அமையவுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

தாராபுரம் தொகுதியில் திமுக, அதிமுக, தவெக இடையே மும்முனைப் போட்டி நிலவி வருகிறது. தேர்தல் களத்தில் ஆளுங்கட்சியான திமுகவை முதன்மை எதிரியாகக் கட்டமைத்து வரும் விஜய், அதேநேரத்தில் களத்தில் சற்றே சுணக்கமடைந்துள்ள அதிமுகவின் அதிருப்தி வாக்குகளையும், பாரம்பரிய இரட்டை இலை ஆதரவாளர்களின் வாக்குகளையும் தவெக வேட்பாளரின் பக்கம் திருப்பத் திட்டமிட்டுள்ளார்.

இன்றைய தாராபுரம் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசவுள்ள விஜய், கொங்கு மண்டலத்தின் தொழில் வளர்ச்சி, விவாசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் நெசவாளர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளை முதன்மையாகக் கையில் எடுக்கவுள்ளார். அத்துடன் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் மக்கள் நலத் தொலைநோக்குப் பார்வைகளைக் குறிப்பிட்டுக் பேசி, அதிமுக தொண்டர்களின் உணர்வுகளைத் தொடும் வகையில் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக தலைமை மீது அதிருப்தியில் உள்ள தொண்டர்களுக்குத் தவெகவே நம்பிக்கையான மாற்று சக்தி என்பதை உணர்த்தும் வகையில் விஜய்யின் வியூகம் அமைந்துள்ளதாகக் கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். விஜய்யின் இந்த அதிரடி நகர்வு தாராபுரம் இடைத்தேர்தல் களத்தில் யாருக்கு சாதகமாக முடியும், யாரை வீழ்த்தும் என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.