பிரிட்டனின் அரச கடற்படைக்குச் சொந்தமான அணுசக்தி நீர்மூழ்கிப் படகுகள் (Nuclear Submarines) துறைமுகங்களில் அல்லது கடலின் மேற்பரப்பில் இருக்கும்போது, எதிரிகளின் ட்ரோன் தாக்குதல்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள உயர்மின்னழுத்த தீயணைப்புக் குழாய்களைப் (High-pressure Fire Hoses) பயன்படுத்துவதாகப் பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வான்வழி அச்சுறுத்தல்களுக்கு எதிராகப் போதிய வான் பாதுகாப்பு அமைப்புகள் இல்லாததால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தி சன் (The Sun) ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
நீர்மழ்கிப் படகுகள் கடலுக்கு அடியில் பயணிக்கும் வரை பாதுகாப்பாக இருந்தாலும், அவை நீர்மட்டத்திற்கு மேலே வரும்போதோ அல்லது ஸ்காட்லாந்தில் உள்ள கடற்படைத் தளங்களில் நிறுத்தப்பட்டிருக்கும்போதோ ட்ரோன் தாக்குதல்களுக்கு இலக்காகும் அபாயம் உள்ளது. சிறிய வகை ட்ரோன்களை எதிர்கொள்ள நீர்மூழ்கிக் கப்பல் ஊழியர்கள் தண்ணீரை அதிவேகமாகப் பீச்சி அடிக்கும் தீயணைப்புக் குழாய்களை மட்டுமே ஆயுதமாகப் பயன்படுத்துவதாகத் பாதுகாப்பு வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
உக்ரைன் போரில் ட்ரோன்களின் பயன்பாடு அதிகரித்துள்ள சூழலில், பிரிட்டனின் மிக முக்கியச் சொத்தான அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு இத்தகைய எளிய பாதுகாப்பு முறையே இருப்பது குறித்துப் பாதுகாப்பு நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும், நவீன வான் பாதுகாப்பு ஏவுகணைகள் அல்லது ட்ரோன் எதிர்ப்பு துப்பாக்கிகளை உடனடியாக நீர்மூழ்கிப் படகுகளில் பொருத்த வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இது தொடர்பாக அரச கடற்படை அல்லது பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தரப்பில் முறையான விளக்கங்கள் எதுவும் அதிகாரப்பூர்வமாக அளிக்கப்படவில்லை. இருப்பினும், தேசியப் பாதுகாப்பை உறுதி செய்யக் கடற்படை தளங்களில் பாதுகாப்பு வழிமுறைகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.