வடக்கு ஐரோப்பாவில் ரஷ்யாவின் சாத்தியமான தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல்களைத் தடுக்கும் நோக்கில், பிரிட்டன் கடற்படையின் ‘ராயல் மரைன்ஸ்’ பிரிவினர் ஃபாரோ தீவுகளில் சிறப்புப் போர் பயிற்சியை வெற்றிகரமாக நடத்தியுள்ளனர். ‘லயன் புரோட்டெக்டர்’ (Lion Protector) என்ற பெயரிலான கூட்டுப் ராணுவப் பயிற்சியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, ஃபாரோ தீவுப் பகுதியில் பிரிட்டன் படைகள் தரை இறங்கி பயிற்சி நடத்துவது இதுவே முதல்முறையாகும். டென்மார்க் மற்றும் ஃபாரோ தீவுகளின் ராணுவப் படைகளுடன் இணைந்து கூட்டுப் பாதுகாப்பு, கடலோரக் கண்காணிப்பு மற்றும் நீர்நிலைப் போர்ப் பயிற்சிகளில் பிரிட்டன் வீரர்கள் ஈடுபட்டனர். ஆர்க்டிக் பகுதி மற்றும் வட அட்லாண்டிக் கடல் வழிகளில் ரஷ்யாவின் நிழற்படை (Shadow fleet) கப்பல்கள் மற்றும் உளவு அமைப்புகளின் நகர்வுகளைத் தடுப்பதே இதன் முதன்மை நோக்கமாகும்.
வடக்கு ஐரோப்பிய பிராந்தியத்தில் ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை அபாயம் அதிகரித்து வரும் சூழலில், பிரிட்டன் மற்றும் அதன் நேட்டோ கூட்டாளி நாடுகளின் இந்த நடவடிக்கை அவசியமானது என பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். கடல்சார் உள்கட்டமைப்புகள் மற்றும் கப்பல் போக்குவரத்துப் பாதைகளைப் பாதுகாப்பதில் பிரிட்டன் உறுதியுடன் செயல்பட்டு வருவதாகப் பிரிட்டன் ராணுவ அதிகாரிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை நடைபெற்ற இந்த ‘லயன் புரோட்டெக்டர்’ பயிற்சி வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், பிராந்தியப் பாதுகாப்பை மேலும் பலப்படுத்த நேட்டோ படைகள் திட்டமிட்டுள்ளன. வட அட்லாண்டிக் பிராந்தியத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவும், கூட்டாளி நாடுகளுடன் இணைந்து கூடுதல் கூட்டுப் பயிற்சிகளை முன்னெடுக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.