Posted in

இங்கிலாந்து அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் புதிய உலக சாதனை: 210 நாட்கள் கடற்பயணம் நிறைவு!

பிரிட்டனின் ராயல் நேவிக்குச் சொந்தமான ‘விக்டிலியஸ்’ (HMS Victorious) எனும் எச்.எம்.எஸ் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் 210 நாட்கள் கடலுக்கடியில் தொடர்ந்து ரோந்துப் பணியில் ஈடுபட்டு புதிய உலக சாதனை படைத்துள்ளது. பிரிட்டனின் அணுசக்தித் தடுப்புப் பாதுகாப்பை (Continuous At-Sea Deterrent) உறுதிசெய்யும் நோக்கில் இந்தக் நீண்ட கடற்பயணம் மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் முந்தைய 201 நாட்களுக்கான சாதனையை இந்த நீர்மூழ்கிக் கப்பல் முறியடித்துள்ளது.

கடலுக்கடியில் சுமார் 7 மாதங்கள் வரை பணியில் இருந்ததால், கப்பலில் இருந்த 130-க்கும் மேற்பட்ட மாலுமிகள் தீவிரமான மன அழுத்தம் மற்றும் உணவுப் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு சவால்களை எதிர்கொண்டனர். நீர்மூழ்கிக் கப்பலின் உள்கட்டமைப்பு மற்றும் மாலுமிகளின் சுகாதார நிலையை நிர்வகிப்பதில் பல சிக்கல்கள் எழுந்ததுடன், மாலுமிகளுக்கான உணவுப் பங்கீடும் குறிப்பிட்ட அளவுக்குக் கட்டுப்படுத்தப்பட்டது. பிரிட்டன் கடற்படையில் போதிய எண்ணிக்கையிலான நீர்மூழ்கிக் கப்பல்கள் பயன்பாட்டில் இல்லாததே இத்தகைய நீண்ட ரோந்துப் பணிக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

இந்த வரலாற்றுச் சாதனை குறித்துப் பேசிய பிரிட்டன் கடற்படை அதிகாரிகள், மாலுமிகளின் தன்னலமற்ற சேவையையும் அர்ப்பணிப்பையும் வெகுவாகப் பாராட்டினர். இருப்பினும், மாலுமிகளின் நலனைக் கருத்தில் கொண்டு இவ்வளவு நீண்ட ரோந்துப் பணிகளைத் தவிர்ப்பதே நல்லது எனப் பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். பிரிட்டனின் பாதுகாப்பு அமைப்பில் இந்த நீண்ட கடற்பயணம் மிக முக்கியமான மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

தற்போது கடற்பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு எச்.எம்.எஸ் விக்டோரியஸ் நீர்மூழ்கிக் கப்பல் தனது கடற்படைத் தளத்திற்குத் திரும்பியுள்ளது.

கப்பலில் இருந்த மாலுமிகளுக்குத் தேவையான மருத்துவப் பரிசோதனைகளும், ஓய்வுக்கான மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.