இங்கிலாந்தின் பல்வேறு கடலோர நகரங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களில், ‘எக்ஸ்எல் கல்லீஸ்’ (XL Gullies) என்று அழைக்கப்படும் அசுர அளவிலான ராட்சச கடற்பறவைகள் (Seagulls) பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளைத் தீவிரமாகத் தாக்கி வருகின்றன. வழக்கமாக உணவுக் கழிவுகளைத் தேடி உண்ணும் இந்தப் பறவைகள், தற்போது மனிதர்கள் கையில் வைத்திருக்கும் உணவுகளை நேரடியாகப் பறிப்பதோடு, அவர்களைக் காயப்படுத்தவும் தொடங்கி உள்ளதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
பிரிட்டனின் பிரைட்டன், லிவர்பூல் மற்றும் போர்த்கால் உள்ளிட்ட முக்கியக் கடலோர நகரங்களில் இந்தப் பறவைகளின் தொல்லை எல்லை மீறியுள்ளது. உணவகங்களில் உணவு அருந்துபவர்கள் மற்றும் தெருவில் நடந்து செல்பவர்களைக் குறிவைத்து, ஒரே நேரத்தில் கூட்டமாகப் பறந்து வந்துத் தாக்குதல் நடத்தும் உத்தியை இவை கையாள்கின்றன. இதில் பலரது கைபேசிகள், கண்ணாடிகள் மற்றும் உணவுகள் பறிபோயுள்ளதோடு, வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்துள்ளனர்.
நகர்ப்புறங்களில் முறையாகக் குப்பைகளைக் கொட்டாமல் உணவுப் பொருட்களைக் கண்டபடி வீசுவதாலும், பொதுமக்களின் உணவுகளுக்கு இந்தப் பறவைகள் பழகிவிட்டதாலுமே இத்தகையAggressive நடத்தையை வெளிப்படுத்துவதாக வனவிலங்கு வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இனப்பெருக்கக் காலத்தில் தங்களது குஞ்சுகளைப் பாதுகாப்பதற்காக இவை கூடுதல் வன்முறையுடன் நடந்துகொள்வதும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தப் பறவைகளுக்குச் சட்டரீதியான பாதுகாப்புகள் உள்ளதால், அவற்றைக் கொல்வதோ அல்லது காயப்படுத்துவதோ சாத்தியமில்லை என உள்ளாட்சி நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன. இதனால், கடலோரப் பகுதிகளுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தங்களது உணவுகளைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறும், பறவைகளுக்கு நேரடியாக உணவளிப்பதைத் தவிர்க்குமாறும் பிரிட்டன் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.