Posted in

அரபிக்கடலில் அடுத்தடுத்து பதற்றம்: சொகோத்ரா தீவு அருகே கப்பலை முற்றுகையிட்ட ஆயுதமேந்திய மர்ம படகுகள்!

ஏமனின் சொகோத்ரா (Socotra) தீவு அருகே அரபிக்கடல் பகுதியில் சென்றுகொண்டிருந்த வணிகக் கப்பல் ஒன்றை, மர்ம நபர்கள் பயணித்த சிறிய படகு ஒன்று மிக நெருக்கமாக முற்றுகையிட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனின் கடல்சார் வர்த்தக பாதுகாப்பு அமைப்பான UKMTO வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிக்கையின்படி, சனிக்கிழமையன்று சொகோத்ரா தீவில் இருந்து மேற்கே சுமார் 200 கடல் மைல் தொலைவில் உள்ள சர்வதேச கடல்வழிப் பாதையில் இந்த அச்சுறுத்தல் சம்பவம் அரங்கேறியுள்ளது.

பெட்ரோலியப் பொருட்களை ஏற்றிச் சென்ற அந்த பிரம்மாண்ட வணிகக் கப்பலை நோக்கி, ஐந்து நபர்களுடன் வந்த ஒரு சிறிய மர்மப் படகு சுமார் 100 மீட்டர் தூரம் வரை மிக நெருக்கமாக அச்சுறுத்தும் வகையில் வந்துள்ளது. உடனடியாக உஷாரான அந்த வணிகக் கப்பலின் ஆயுதமேந்திய பாதுகாப்புப் படையினர் (Armed Security Team), தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு எதிர்வினையாற்றினர். பாதுகாப்புப் படையினரின் கடுமையான எச்சரிக்கையைத் தொடர்ந்து, அந்த மர்மப் படகு தனது பயணப் பாதையை மாற்றிக்கொண்டு அங்கிருந்து தப்பியோடியது.

இதற்கு முன்னதாக, வெள்ளிக்கிழமையன்றும் இதே சொகோத்ரா தீவுக்கு வடக்கே 98 கடல் மைல் தொலைவில் மற்றொரு எண்ணெய் tanker கப்பலை மர்ம நபர்கள் நெருங்கியபோது, கப்பல் பாதுகாப்புப் படையினர் எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு (Warning Shots) நடத்தி அவர்களை விரட்டியடித்தனர். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் கடுமையான அரசியல் மற்றும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஏடன் வளைகுடா மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் வணிகக் கப்பல்களைக் குறிவைத்து கடற் கொள்ளையர்கள் மற்றும் ஆயுதக் குழுக்களின் நடமாட்டம் கணிசமாக அதிகரித்துள்ளதை இந்த அடுத்தடுத்த சம்பவங்கள் உறுதிப்படுத்துகின்றன.

தற்போது அரபிக்கடல், ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் ஓமன் வளைகுடா ஆகிய முக்கிய கடல்வழிப் பாதைகளில் பாதுகாப்பு அச்சுறுத்தல் மிகத் தீவிரமான நிலையை எட்டியுள்ளதாக UKMTO எச்சரித்துள்ளது. இப்பகுதியில் பயணிக்கும் அனைத்து சர்வதேச வணிகக் கப்பல்களும் மிகக் கடுமையான எச்சரிக்கையுடனும், கூடுதல் பாதுகாப்புடனும் செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், சந்தேகத்திற்குரிய எந்தவொரு நடமாட்டத்தையும் உடனடியாக கடல்சார் அதிகாரிகளுக்குத் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.