Posted in

ரஷ்ய போர் விமானங்களை ஏவுகணை மூலம் தகர்த்ததாக உக்ரைன் கடற்படை தகவல்

ரஷ்யாவின் வொரோனேஷ் (Voronezh) பகுதியில் உள்ள போரிசோக்லெப்ஸ்க் (Borisoglebsk) ராணுவ விமான நிலையத்தை இலக்காகக் கொண்டு உக்ரைன் கடற்படை இரவு நேரத்தில் தாக்குதல் நடத்தியுள்ளது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ‘நெப்டியூன்’ (Neptune) ரக ஏவுகணைகளைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், ரஷ்யாவின் 6 Su-34M  ரக போர் விமானங்கள் சேதமடைந்ததாக உக்ரைன் ராணுவம் டெலிகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இதில் நான்கு விமானங்கள் முழுமையாகவும், இரண்டு விமானங்கள் குறிப்பிடத்தக்க அளவிலும் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள உக்ரைன் அதிபர் வொலோதிமிர் ஜெலென்ஸ்கி, உக்ரைன் மக்கள் மீது தாக்குதல் நடத்தத் தயாராக இருந்த போர் விமானங்களையே தங்களது நெப்டியூன் ஏவுகணை துல்லியமாகத் தாக்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அதேவேளையில், வொரோனேஷ் பிராந்தியத்தில் 33 ட்ரோன்கள் மற்றும் வான்வழி இலக்குகளைத் தங்களது வான் பாதுகாப்புப் படைகள் சுட்டு வீழ்த்தியதாக அப்பகுதியின் ஆளுநர் அலெக்சாண்டர் குசேவ் தெரிவித்துள்ளார். இருப்பினும், விமான தளத்தின் மீதான தாக்குதல் குறித்து ரஷ்ய ராணுவ அமைச்சகம் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ கருத்துக்களையும் வெளியிடவில்லை.

எல்லைப் பகுதிகளில் ரஷ்யா நடத்தி வரும் குண்டுவீச்சுகளுக்குப் பதிலடியாக உக்ரைன் தனது நீண்டதூர ஏவுகணைத் தாக்குதல்களை மேலும் தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளது.