Posted in

ஆளில்லா தரை வாகனத்தில் இருந்து 18 ட்ரோன்கள் ஏவி அமெரிக்க ராணுவம் சோதனை

ஜெர்மனியின் கிராஃபென்வோயர் (Grafenwoehr) பயிற்சி தளத்தில், ஆளில்லா தரை வாகனத்தில் இருந்து 18 ட்ரோன்களை ஏவி அமெரிக்க ராணுவம் நேரடித் தாக்குதல் சோதனை நடத்தியுள்ளது. நவம்பர் 12-ஆம் தேதி நடைபெற்ற இந்தச் சோதனையில், ‘ஆர்3நெகேட்’ (R3NEGADE) என்ற ஆளில்லா தரை வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த ‘ஹெச்ஐவி3’ (HIV3) ஏவு அமைப்பு மூலம் சிறிய ட்ரோன்கள் கூட்டமாக ஏவப்பட்டன.

அமெரிக்க ராணுவத்தின் போர்த் திறன் மேம்பாட்டுக் கட்டளை ஆயுத மையம் (DEVCOM Armaments Center), அமெரிக்க ராணுவ ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கா பிரிவு மற்றும் 7-வது ராணுவப் பயிற்சிக் கட்டளை ஆகியவை இணைந்து இந்தப் பயிற்சியை நடத்தின. அதிக தூரத்தில் உள்ள இலக்குகளைத் தாக்குவதற்கும், வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், குறைந்த செலவில் தாக்குதல் வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் இந்தத் தொழில்நுட்பம் சோதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சோதனையின்போது இலக்கின் மீது டிஆர்வி-150 (TRV-150) ட்ரோன் மூலம் புகை வீசப்பட்டதைத் தொடர்ந்து, 18 ட்ரோன்கள் ஒருங்கிணைந்த தாக்குதலை மேற்கொண்டன.

இந்தச் சோதனையை வழிநடத்திய டெவ்காம் (DEVCOM) ஆயுத மையத்தின் மூலோபாய ஆலோசகர் ட்ராய் பிரானன், இது சாத்தியக்கூறுகளின் ஒரு பகுதி மட்டுமே எனக் குறிப்பிட்டுள்ளார். பொறியாளர்கள் தொழில்நுட்பத்தை உருவாக்க முடிந்தாலும், அது வீரர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கத் தொடக்கத்திலிருந்தே வீரர்களின் கருத்துகளைக் கேட்க வேண்டும் என டெவ்காம் மூத்த அதிகாரி தின் ஹுயின் தெரிவித்துள்ளார். கருவிகளை இயக்கும் வீரர்களின் கருத்து முக்கியமானது என 173-வது படைப்பிரிவின் ட்ரோன் இயக்குநரான சார்ஜென்ட் டீன் அகுய்ரேவும் கருத்து கூறியுள்ளார்.

மற்றொரு ஆர்3நெகேட் வாகனத்தில் ஜாவலின் ஏவுகணை ஏவும் அமைப்பும், டிஆர்வி-400 விமானமும் இந்த நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டன. காட்சிப்படுத்தப்பட்ட இந்த அமைப்புகள் எதுவும் இன்னும் நிதி ஒதுக்கீடு பெற்ற களத் திட்டங்களில் சேர்க்கப்படவில்லை என்றும், படைப்பிரிவுகளிடம் வழங்குவதற்கான காலக்கெடு எதுவும் அறிவிக்கப்படவில்லை என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.