அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை வெள்ளை மாளிகையில் நேரில் சந்தித்த அமெரிக்க மத்தியக் கட்டளைப் பிரிவின் (CENTCOM) தளபதி அட்மிரல் பிராட் கூப்பர், இரான் மீதான சாத்தியமான ராணுவத் தாக்குதல்கள் மற்றும் வான்வழித் திட்டங்கள் குறித்து விரிவான விளக்கம் அளித்தார். இந்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் மற்றும் தலைமைப் படைத்தளபதி ஜெனரல் டான் கெய்ன் ஆகியோரும் பங்கெடுத்தனர். மத்திய கிழக்கில் அமெரிக்கப் படைகளைப் பலப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமடைந்து வரும் சூழலில், இந்தச் சந்திப்பு மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
கடந்த பிப்ரவரி மாதத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து இரான் மீது நடத்திய வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து, அப்பகுதியில் பதற்றம் அதிகரித்து வருகிறது. வரவிருக்கும் நவம்பர் இடைக்காலத் தேர்தலுக்குப் பிறகு இரான் மீது குறுகிய கால அளவிலான தீவிர ராணுவ நடவடிக்கைகளை முன்னெடுக்க அமெரிக்கா திட்டமிட்டு வருவதாகக் மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், கூடுதல் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளையும் ஆயுதங்களையும் மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கு அனுப்பும் பணிகளைப் பென்டகன் முடுக்கிவிட்டுள்ளது.
அமெரிக்காவின் இந்த புதிய ராணுவத் திட்டங்களுக்கு ஜனநாயக் கட்சியின் மூத்த எம்.பி-க்கள் சிலர் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர். மறுபுறம், அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தினால் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கப் படைகள் மற்றும் அதன் கூட்டாளி நாடுகள் மீது கடுமையான பதிலடித் தாக்குதல்கள் நடத்தப்படும் என இரான் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.
இரானுக்கு எதிரான புதிய ராணுவத் தாக்குதல்கள் குறித்து அதிபர் டொனால்ட் டிரம்ப் இதுவரை இறுதி அதிகாரப்பூர்வ முடிவை அறிவிக்கவில்லை.
மத்திய கிழக்கில் அமெரிக்கப் படைகளின் நகர்வுகள் தீவிரமடைந்து வரும் நிலையில், வெள்ளை மாளிகையின் அடுத்தகட்ட அறிவிப்பை சர்வதேச நாடுகள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.