ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நுழைய முயன்ற அமெரிக்கக் கடற்படையின் போர்க்கப்பல் மீது இரண்டு ஏவுகணைகளை வீசித் தாக்கியதாகவும், இதனால் அந்தக் கப்பல் சேதமடைந்து பின்வாங்கியதாகவும் ஈரான் அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையின் (IRGC) எச்சரிக்கையை மீறிச் செயல்பட்டதால், ஜஸ்க் (Jask) தீவு அருகே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும், இந்தச் செய்தியை அமெரிக்காவின் மத்திய கட்டளைத் தலைமையகம் (CENTCOM) உடனடியாக மறுத்துள்ளது. “அமெரிக்கக் கடற்படையின் எந்தவொரு போர்க்கப்பலும் தாக்கப்படவில்லை; ஈரானின் இந்தத் தகவல் முற்றிலும் உண்மைக்கு மாறானது” என்று அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது.
அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள ‘புராஜெக்ட் ஃப்ரீடம்’ (Project Freedom) என்ற புதிய திட்டத்தின் கீழ், ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கியுள்ள வணிகக் கப்பல்களைப் பாதுகாப்பாக வெளியேற்றும் பணியில் அமெரிக்க ராணுவம் ஈடுபட்டுள்ளது. இதற்காக சுமார் 15,000 வீரர்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் இந்த நடவடிக்கையைத் தங்களது நாட்டின் பாதுகாப்பிற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகக் கருதுவதாக ஈரான் எச்சரித்துள்ளது. ஈரானின் அனுமதியின்றி ஜலசந்திக்குள் நுழையும் எந்தவொரு வெளிநாட்டுப் படையும் கடுமையாகத் தாக்கப்படும் என்று ஈரானின் ராணுவத் தளபதி அலி அப்துல்லாஹி தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலவரப்படி, இரண்டு அமெரிக்க வணிகக் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியைப் பாதுகாப்பாகக் கடந்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தரப்பிலிருந்து ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் இதுவரை 3,300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக ஈரானிய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. பதிலுக்கு ஈரான் நடத்திய தாக்குதல்களில் 13 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏப்ரல் 7 முதல் ஒரு தற்காலிகப் போர்நிறுத்தம் அமலில் இருந்தாலும், அமைதிப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் இரு நாடுகளுக்கும் இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன.
இந்த மோதல் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சுமார் 5 சதவீதம் உயர்ந்து, ஒரு பேரல் 113 டாலரை எட்டியுள்ளது. ஈரானியத் துறைமுகங்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள கடல்வழி முற்றுகையை விலக்கினால் மட்டுமே ஜலசந்தியை மீண்டும் முழுமையாகத் திறக்க முடியும் என்று ஈரான் பிடிவாதம் காட்டி வருகிறது. அதே சமயம், தங்களது கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்ய எந்த எல்லைக்கும் செல்லத் தயார் என்று டிரம்ப் நிர்வாகம் எச்சரித்துள்ளது. பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்ட உலகத் தலைவர்கள், இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் சுமுக முடிவை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.