ஓமன் வளைகுடாவில் ஈரான் துறைமுகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கடற்படை முற்றுகையை மீறிச் செல்ல முயன்ற பனாமா நாட்டின் கொடி பொறுத்தப்பட்ட சரக்குக் கப்பல் மீது, அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர் துப்பாக்கிச் சூடு நடத்தித் தாக்குதல் மேற்கொண்டுள்ளது. ஓமன் வளைகுடாவில் இங்கிணைந்த கடல் பகுதியில் நடைபெற்ற இச்சம்பவம், மத்திய கிழக்கில் ஏற்கனவே நிலவி வரும் அமெரிக்க-ஈரான் பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
ஈரான் மீதான பொருளாதார மற்றும் வணிகத் தடைகளை வலுப்படுத்தும் நோக்கில், அமெரிக்கக் கடற்படை ஈரானியத் துறைமுகப் பகுதிகளில் கடுமையான முற்றுகையை அமல்படுத்தி வருகிறது. இந்தச் சூழலில், ‘வேலா நோவா’ (Vela Nova) என அடையாளப்படுத்தப்பட்ட பனாமா நாட்டுச் சரக்குக் கப்பல், அமெரிக்க ராணுவத்தின் தொடர் எச்சரிக்கைகளைப் புறக்கணித்துவிட்டு ஈரானியத் துறைமுகத்தை நோக்கிச் செல்ல முயன்றதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கப் படைகளின் எச்சரிக்கை அழைப்புகளைக் கப்பல் பணியாளர்கள் கண்டுகொள்ளாமல் பயணத்தைத் தொடர்ந்ததால், அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர் அக்கப்பலின் திசைதிருப்புப் பகுதியான ‘ரடர்’ (Rudder) மீது இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தியது. இதனால் கப்பலின் இயக்கக் கட்டுப்பாடுகள் முடங்கியதுடன், சிறிய அளவில் தீ விபத்தும் ஏற்பட்டது. எனினும், இத்தாக்குதலில் பணியாளர்கள் எவருக்கும் உயிரிழப்போ அல்லது காயங்களோ ஏற்படவில்லை என்றும், தீ பின்னர் அணைக்கப்பட்டதாகவும் செய்திகள் உறுதிப்படுத்தியுள்ளன.
தாக்குதலுக்கு உள்ளான கப்பல் அதன் இயக்கத்தை இழந்துள்ள நிலையில், கப்பலில் இருந்த பணியாளர்களை அருகிலிருந்த மற்றொரு சிவிலியன் கப்பலுக்கு மாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மத்திய கிழக்கு வான்வழியிலும் சர்வதேச கடல் பாதைகளிலும் பாதுகாப்பு கவலைகள் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கை சர்வதேச ரீதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.