ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் இத்தாலி போன்ற தெற்கு ஐரோப்பிய நாடுகளின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்கள் மீது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ட்ரோன் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ (CIA) எச்சரிக்கை விடுத்துள்ளது. உக்ரைன் போரில் நேட்டோ நாடுகள் அளித்து வரும் இராணுவ ஆதரவிற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தச் சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மெடிடரேனியன் (மத்தியதரைக் கடல்) சர்வதேச கடல் பகுதியில் பயணிக்கும் ரஷ்ய வர்த்தகக் சரக்குக் கப்பல்களில் மறைத்து வைக்கப்படும் ‘கெர்பெரா’ (Gerbera) வகை ட்ரோன்கள் மூலம் இந்தக் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என ஸ்பெயின் நாளிதழான ‘எல் முண்டோ’ வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சுமார் 600 கிலோமீட்டர் வரை பயணிக்கும் திறன் கொண்ட இந்த சிறிய ட்ரோன்களைக் கப்பல்களில் இருந்து இயக்குவது மிகவும் எளிதானது எனப் பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர்.
நேரடி ராணுவத் தாக்குதலாக இல்லாமல், ஐரோப்பிய நாடுகளின் விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் மக்கள் கூடும் சுற்றுலாத் மையங்களை இலக்கு வைத்துச் சிறிய அளவிலான பாதிப்புகளையும் தீ விபத்துகளையும் ஏற்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம் எனக் கூறப்படுகிறது. இதன் மூலம் ஐரோப்பிய நாடுகளில் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியான குழப்பத்தையும், மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் உருவாக்க ரஷ்யா முயல்வதாக அமெரிக்க புலனாய்வு அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இந்த அமெரிக்க எச்சரிக்கையைத் தொடர்ந்து பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் தங்களது கடல் எல்லை கண்காணிப்பையும், வான்வழி பாதுகாப்பு அமைப்புகளையும் தீவிரப்படுத்தியுள்ளன. ஏற்கனவே போலந்து மற்றும் ஜெர்மனி எல்லைகளில் ரஷ்ய ட்ரோன்களின் ஊடுருவல்கள் பதிவாகியுள்ள நிலையில், தற்போது தெற்கு ஐரோப்பிய சுற்றுலாத் தலங்களுக்கும் அச்சுறுத்தல் எழுந்துள்ளதால் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.