Posted in

போலந்தை இலக்குவைக்கும் ரஷ்யாவின் ஹைபிரிட் தாக்குதல் திட்டம்: அமெரிக்கா விடுத்துள்ள அதிர்ச்சி எச்சரிக்கை

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் ஐந்தாவது ஆண்டை எட்டியுள்ள நிலையில், ஐரோப்பாவில் பாதுகாப்பு பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. நேட்டோ (NATO) கூட்டுப் பாதுகாப்பு அமைப்பின் வலிமையையும், உறுதியையும் சோதிப்பதற்காகப் போலந்து அல்லது பால்டிக் நாடுகள் மீது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஒரு தந்திரோபாயத் தாக்குதலை (Armed Provocation) நடத்தத் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை வாஷிங்டனில் இருந்து வார்சாவுக்கு (Warsaw) அவசர எச்சரிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் வழங்கி வரும் ராணுவ உதவிகளை முடக்குவதே ரஷ்யாவின் இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் என்றும், அடுத்த சில மாதங்களுக்குள் இந்த அச்சுறுத்தல் நிஜமாகலாம் என்றும் அமெரிக்க மற்றும் போலந்து பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரஷ்யாவின் இந்தத் திட்டம் ஒரு முழு அளவிலான போராக இல்லாமல், நேட்டோவின் ‘பிரிவு 5’ (Article 5) கூட்டுப் பாதுகாப்பு விதியைத் தூண்டாத வகையிலான ஒரு ‘ஹைப்ரிட்’ (Hybrid) அல்லது மறைமுகத் தாக்குதலாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. போலந்தின் மின் உற்பத்தி நிலையங்கள் போன்ற முக்கியமான உள்கட்டமைப்புகள் மீது ஒரே நேரத்தில் ட்ரோன் தாக்குதல்களை நடத்துவது அல்லது போலந்தின் வான் பாதுகாப்பு அமைப்புகளைச் சோதிப்பதற்காக ஒரு பிரம்மாண்டமான போலி வான்வழித் தாக்குதலை (Simulated Air Attack) ரஷ்யா அரங்கேற்றலாம் என அஞ்சப்படுகிறது. மேலும், ஜிபிஎஸ் (GPS) சிக்னல் குளறுபடிகளால் ரஷ்ய ராணுவத்தினர் தடம் மாறி போலந்து எல்லைக்குள் நுழைந்துவிட்டது போலவோ அல்லது ஹெலிகாப்டர் அவசரநிலை மீட்புப் பணி போலவோ போலந்து எல்லைப் பகுதிக்குள் ஊடுருவவும் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

சமீபத்தில் போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ராடோஸ்லா சி கோர்ஸ்கி ஆகியோர் நேட்டோவின் கிழக்கு எல்லைப் பகுதி மிகவும் நிலையற்றதாக உள்ளதாகக் கவலை தெரிவித்துள்ளனர். நேட்டோ நாடுகளைத் தாக்குவதற்கு ஏதுவாக, ரஷ்யா தனது சொந்த எல்லைக்குள்ளேயே ஒரு போலித் தாக்குதலை (False Flag Operation) நடத்தி, அதைப் போலந்து மீது பழிசுமத்த வாய்ப்புள்ளதாக அவர்கள் எச்சரித்துள்ளனர். அமெரிக்காவின் அழுத்தங்கள் காரணமாகப் போலந்து உடனடியாகத் தீவிரமான ராணுவப் பதில் நடவடிக்கையில் இறங்காது என்றும், ஒருவேளை ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்திவிட்டு எந்தவிதப் பாதிப்பும் இல்லாமல் தப்பிச் சென்றால் அது கிரெம்ளினுக்குக் கிடைக்கும் தந்திரோபாய வெற்றியாக மாறும் என்றும் ரஷ்யா கணக்கு போடுவதாக உளவுத்துறைத் தகவல்கள் கூறுகின்றன.

அடுத்த வாரம் அங்காராவில் நடைபெறவுள்ள நேட்டோ உச்சி மாநாட்டிற்கு முன்னதாக இந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது உலக நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், போலந்தில் அமெரிக்காவின் நிரந்தர ராணுவத் தளத்தை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளும் தீவிரமடைந்துள்ளன. உக்ரைன் எல்லையையொட்டிய போலந்து பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வரும் நிலையில், புதினின் இந்த மறைமுகத் திட்டங்களை முறியடிக்க நேட்டோ உறுப்பு நாடுகள் அனைத்தும் முழு ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று போலந்து அரசு வலியுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *