பிரிட்டனில் உள்ள ஆர்ஏஎஃப் பேர்ஃபோர்டு (RAF Fairford) விமானப் படைத்தளத்தில் இருந்து தனது பி-1 (B-1) ரகக் குண்டுவீச்சு போர்விமானங்களை அமெரிக்கா திடீரென வாபஸ் பெற்று சொந்த நாட்டிற்குத் திரும்ப அழைத்துள்ளது. தளம் மீதான பயங்கரவாதத் தாக்குதல் அச்சுறுத்தல்கள் காரணமாக இந்த அவசர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்த இந்தத் தளத்திற்கு வெளியே வெடிபொருட்களுடன் கூடிய மிரட்டல் சம்பவங்கள் தொடர்பாகச் சிலர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து பாதுகாப்பு அச்சுறுத்தல் எழுந்தது. இதன் பேரில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் தனது போர்விமானங்களை அங்கிருந்து உடனடியாக வெளியேற்ற உத்தரவிட்டது. இச்சம்பவம் பிரிட்டனின் பாதுகாப்பு அமைப்பின் மீதான நம்பிக்கையின்மையைக் காட்டுவதாக ராணுவ வல்லுநர்கள் விமர்சித்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இக்கைது நடவடிக்கைகள் குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், பாதுகாப்புப் படையினரின் செயல்பாடுகளைப் பாராட்டிய போதிலும் சந்தேக ந நபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டதற்கு வியப்புத் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, இச்சம்பவம் தொடர்பாகவும் தங்களது தூதரை அழைத்து ஈரான் அரசு தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தற்போது அமெரிக்க விமானங்கள் அனைத்தும் திரும்பப் பெறப்பட்டுள்ள நிலையில், பிரிட்டனில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களின் பாதுகாப்பு வசதிகள் குறித்து இரு நாடுகளின் பாதுகாப்பு அதிகாரிகளும் மறுஆய்வு செய்து வருகின்றனர். சர்வதேச அளவில் நிலவும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், இந்தப் போர்விமானங்கள் வாபஸ் பெறப்பட்டது ஐரோப்பிய பிராந்தியப் பாதுகாப்பில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.