உலகில் நவீன நாகரிகம் ஏதும் இன்றி, வெளி உலகத் தொடர்பே இல்லாமல் அந்தமான் நிக்கோபார் தீவுக்கூட்டத்தின் ‘வடக்கு சென்டினல்’ (North Sentinel Island) தீவில் வாழும் சென்டினல் பழங்குடியின மக்களைப் படம் பிடிக்க முயன்ற அமெரிக்க யூடியூபர் மைக்கைலோ விக்டோரோவிச் பொலியாகோவ் (Mykhailo Viktorovych Polyakov) இந்தியப் போலீசாரால் அண்மையில் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார் . தடைசெய்யப்பட்ட அந்தத் தீவிற்குள் சட்டவிரோதமாகப் புகுந்த அவர், அங்கிருந்த கடற்கரையில் சென்டினல் பழங்குடியினருக்கு ‘காணிக்கை’ என்ற பெயரில் ஒரு டயட் கோக் கேன் மற்றும் தேங்காய் ஆகியவற்றை வைத்துவிட்டு வந்துள்ளார். இந்த ஆபத்தான செயல், அந்தப் பழங்குடியின மக்களை மொத்தமாக அழிக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாக உலகளாவிய பழங்குடியின பாதுகாப்பு அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், தன் மீதான குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்துள்ள 24 வயதான அந்த யூடியூபர், தனது செயலை நியாயப்படுத்தி மிகவும் வினோதமான மற்றும் திமிரான வாதம் ஒன்றை முன்வைத்துள்ளார். தான் அந்தப் பழங்குடியின மக்களை “ஆயிரம் ஆண்டுகள் முன்னோக்கி, எதிர்கால நாகரிகத்திற்குள் கொண்டு செல்லவே” (Wanted to propel them into the future) அந்த கோக் கேனை விட்டுச் சென்றதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஒருவரை வெறும் கண்களால் பார்ப்பதன் மூலமாகவோ அல்லது தூரத்திலிருந்து கவனிப்பதன் மூலமாகவோ எந்தவொரு நோயும் யாருக்கும் பரவிவிடாது (You can’t catch diseases by looking at someone) என்றும் அவர் மிகவும் அலட்சியமாகக் கூறியுள்ளார்.
ஆனால், நவீன உலக மனிதர்களுடன் எவ்விதத் தொடர்பும் இல்லாத சென்டினல் பழங்குடியினருக்கு, நம்மிடம் இருக்கும் சாதாரண சளி, காய்ச்சல் அல்லது தட்டம்மை (Measles) போன்ற நோய்களை எதிர்க்கும் நோய் எதிர்ப்புச் சக்தி (Immunity) கிடையாது என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இதனால், வெளியில் இருந்து செல்லும் மனிதர்கள் தொட்ட ஒரு கோக் கேன் மூலமாகக் கூட வைரஸ்கள் பரவி, அந்தத் தீவில் இருக்கும் ஒட்டுமொத்த 150 பழங்குடியின மக்களின் இனத்தையே முற்றிலும் துடைத்தெறியும் (Wipe out) கொடூர ஆபத்து இருப்பதாக ‘சர்வைவல் இன்டர்நேஷனல்’ (Survival International) போன்ற சர்வதேச அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன. இத்தகைய ஆபத்துகள் தெரிந்தே, சமூக ஊடகங்களில் ‘வியூஸ்’ (Views) வாங்குவதற்காகப் பழங்குடியினரின் உயிருடன் விளையாடிய யூடியூபரின் செயல் அநாகரிகமானது எனப் பலரும் சாடி வருகின்றனர்.
கடந்த 2018 ஆம் ஆண்டில் ஜான் ஆலன் சாவ் என்ற மற்றொரு அமெரிக்க மதப்பரப்புரையாளர் இதேபோல சென்டினல் தீவிற்குள் சட்டவிரோதமாகப் புகுந்த போது, பழங்குடியினரால் அம்புகளால் எய்து கொல்லப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் உலகையே உலுக்கியது குறிப்பிடத்தக்கது தற்போது பிடிபட்டுள்ள இந்த யூடியூபர், கடந்த சில மாதங்களில் மட்டும் மூன்று முறை பாய்மரப் படகுகள் மற்றும் ரகசிய வழிகள் மூலம் இந்தத் தீவை அணுக முயன்றது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. பழங்குடியினர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள இவருக்கு, இந்தியாவில் அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் கடுமையான அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக அந்தமான் போலீசார் தெரிவித்துள்ளனர்.