மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெறவுள்ள 31-வது தென் மண்டல கவுன்சில் கூட்டத்திற்கான ஆயத்தப் பணிகளைத் தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காகத் தமிழக அரசு சார்பில் உயர்மட்டப் பிரதிநிதிகள் குழு முறைப்படி அமைக்கப்பட்டுள்ளது. தென் மாநிலங்களுக்கு இடையிலான எல்லை, நீர்ப் பங்கீடு மற்றும் உள்கட்டமைப்பு சார்ந்த முக்கிய பிரச்சினைகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
இந்த முக்கியத்துவம் வாய்ந்த தென் மண்டல கவுன்சிலில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்பதற்காக 2 அமைச்சர்களை முதல்வர் சி. ஜோசப் விஜய் பரிந்துரை செய்து நியமித்துள்ளார். அதன்படி, ஆற்றல் வளங்கள் மற்றும் சட்டத்துறை அமைச்சர் ஆர். நிர்மல்குமார், பள்ளிக்கல்வி மற்றும் செய்தித் துறை அமைச்சர் ராஜமோகன் ஆகியோர் கவுன்சில் உறுப்பினர்களாகச் செயல்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் விஜய்யுடன் இணைந்து இந்த இரு அமைச்சர்களும் கூட்டத்தில் மாநிலத்தின் கோரிக்கைகளை முன்வைப்பார்கள்.
மாநில மறுசீரமைப்புச் சட்டம் 1956-ன் கீழ் அமைக்கப்பட்ட இந்த அமைப்பில், தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா ஆகிய மாநிலங்களும் புதுச்சேரி ஒன்றிய பிரதேசமும் அங்கம் வகிக்கின்றன. மண்டல கவுன்சில் விதிகளின்படி அம்மாநில ஆளுநரின் ஒப்புதலுடன் முதலமைச்சர் மற்றும் இரு அமைச்சர்கள் பிரதிநிதிகளாக நியமிக்கப்படுகின்றனர். மேலும் நிர்வாக ரீதியிலான ஆலோசனைகளுக்காகத் தலைமைச் செயலாளர் எம். சாய்குமார் மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளர் கே. மணிவாசன் ஆகியோரும் இக்குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் அப்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் டி.ஆர்.பி. ராஜா மற்றும் பி.கே. சேகர்பாபு ஆகியோர் இக்கவுன்சில் உறுப்பினர்களாகப் பொறுப்பு வகித்தனர். தற்போது மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள கூட்டத்தில் புயல் நிவாரண நிதிகள், மாநில உரிமைகள் மற்றும் பிராந்திய உள்கட்டமைப்பு மேம்பாடுகள் குறித்த முக்கியக் கோரிக்கைகளை மத்திய அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் தமிழக அரசு பலமாக முன்வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.