Posted in

காரில் இருந்து விஜய் அடித்த சல்யூட்: நெகிழ்ந்துபோய் த்ரிஷா கொடுத்த ரியாக்‌ஷன்!

சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், முதன்முறையாக மாநில முதலமைச்சராக தேசியக்கொடியை ஏற்றி வைத்தார் விஜய். விழா நிறைவடைந்ததும் திறந்த காரில் அணிவகுப்பு மரியாதையை ஏற்றவாறு புறப்பட்ட விஜய், சிறப்பு விருந்தினர்கள் அமர்ந்திருந்த பகுதிக்கு அருகில் வந்தபோது, அங்கிருந்த த்ரிஷாவைப் பார்த்து காரில் இருந்தபடியே புன்னகையுடன் சல்யூட் செய்தார். இந்த காட்சி அங்கிருந்த அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது.

விஜய்யின் எதிர்பாராத இந்த சல்யூட் மரியாதையைக் கண்ட நடிகை த்ரிஷா, உடனடியாக எழுந்து நின்று முகத்தில் புன்னகை மிளிர பதிலுக்கு சல்யூட் செய்து தனது வாழ்த்துகளையும் நெகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினார். மஞ்சள் நிறப் பட்டுச் சேலையில் பேரழகாக வந்திருந்த த்ரிஷா, விஜய்யின் இந்த கம்பீரமான கௌரவத்திற்கு அளித்த ஸ்வீட்டான ரியாக்‌ஷன் அங்கிருந்த பார்வையாளர்களின் கவனத்தை ஒட்டுமொத்தமாகத் தன் பக்கம் திருப்பியது.

முன்னதாக, விழாவின் தொடக்கத்திலிருந்தே விஜய்யின் பெற்றோர்களான எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் சோபா சந்திரசேகர் ஆகியோருக்கு அருகிலேயே த்ரிஷா முதல் வரிசையில் அமர்ந்திருந்தார். விஜய்யின் குடும்பத்தினருடன் அவர் காட்டிய நெருக்கமும் இயல்பான உரையாடல்களுமே இணையத்தில் வைரலாகி வந்த நிலையில், அணிவகுப்பு ஊர்வலத்தின் போது விஜய்யும் த்ரிஷாவும் பரஸ்பரம் சல்யூட் செய்து கொண்ட தருணம் இணையத்தில் தீயாகப் பரவத் தொடங்கியது.

அரசு விழாக்கள் மற்றும் அரசியல் நிகழ்வுகளின் போது இருவருக்கும் இடையிலான இந்த பிணைப்பும் பரஸ்பர மரியாதையும் தான் தற்போது சமூக வலைதளங்களில் மிக முக்கியமான விவாதப் பொருளாக உருவெடுத்துள்ளது. “கொடியேற்ற நிகழ்வில் எத்தனையோ தலைவர்கள் பங்கேற்றிருந்தாலும், காரில் இருந்து விஜய் அடித்த சல்யூட்டும் பதிலுக்கு த்ரிஷா செய்த அந்த செயலுமே எல்லாரது கண்ணையும் 2 பேர் மேல தூக்கி நிறுத்தியுள்ளது” என நெட்டிசன்கள் வீடியோவைப் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.