Posted in

GOAT’ பட டிராஃபிக் போலீஸ் டூ தவெக போக்குவரத்து அமைச்சர்: யார் இந்த விஜய் தமிழன் பார்த்திபன்?

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று, தவெக தலைவர் விஜய் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ளது. ஏற்கனவே முதற்கட்டமாக 10 அமைச்சர்கள் பதவியேற்றிருந்த நிலையில், இன்று தமிழக வெற்றிக் கழக அரசின் அமைச்சரவை விரிவாக்கம் மிக முக்கிய அரசியல் நகர்வாக நடைபெற்றது. இந்த விரிவாக்கத்தின் போது புதிய அமைச்சர்கள் பலர் பொறுப்பேற்றுக் கொண்டனர். அதில் ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில், எளிய பின்னணியைக் கொண்ட ஒருவருக்கு மிக முக்கியத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சேலம் தெற்கு சட்டமன்றத் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு 33,369 வாக்குகள் என்ற மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ-வான விஜய் தமிழன் பார்த்திபன், புதிய போக்குவரத்து துறை அமைச்சராகப் பதவியேற்றுள்ளார். ஆரம்பக் காலங்களில் சேலம் பழைய பேருந்து நிலையப் பகுதியில் மிகச் சிறிய அளவில் பிரௌசிங் சென்டர் மற்றும் மொபைல் கடை நடத்தி வந்த இவருக்கு, தற்போது மாநிலத்தின் முக்கிய அமைச்சரவை பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் மக்கள் இயக்கத்தின் ஆரம்பக் காலம் முதலே தீவிரமாகச் செயல்பட்டு வந்த பார்த்திபன், சேலம் மாவட்டத்தில் பல்வேறு மக்கள் நலப்பணிகளையும் சமூக சேவைகளையும் முன்னெடுத்து வந்தவர். இதன் காரணமாக தவெக தலைவர் விஜய் மற்றும் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோருடன் மிக நெருக்கமான நம்பிக்கையைப் பெற்றிருந்தார். மேலும், விஜய்யின் சில திரைப்படங்களுக்குச் சேலம் மாவட்ட விநியோகஸ்தராகவும் (Distributor) இவர் தடம் பதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல் மற்றும் சமூகப் பணி மட்டுமின்றி, விஜய்யின் தீவிர ரசிகரான பார்த்திபன் இதுவரை விஜய்யின் 15 திரைப்படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான ‘கோட்’ (GOAT) திரைப்படத்தில் இவர் போக்குவரத்து காவலராக (Traffic Police) நடித்திருந்தார். திரைப்படத்தில் டிராஃபிக் போலீஸாக நடித்தவர், இன்று நிஜ வாழ்க்கையில் அதே போக்குவரத்துத் துறையின் மாநில அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளது ஒரு சுவாரசியமான சினிமா பாணி திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.