தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பெற்று, தவெக தலைவர் சி. ஜோசப் விஜய் கடந்த மே 10-ஆம் தேதி தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றார். அவருடன் முதற்கட்டமாக 9 அமைச்சர்கள் மட்டுமே பதவியேற்றுக் கொண்டனர். அதன் தொடர்ச்சியாக மே 11 அன்று புதிய சட்டப்பேரவை கூடி எம்.எல்.ஏ-க்கள் பதவியேற்பு, சபாநாயகர் தேர்தல் மற்றும் தவெக அரசின் பெரும்பான்மையை நிரூபிக்கும் விசுவாசத் தீர்மானம் ஆகிய அரசியல் நடைமுறைகள் சுமுகமாக நிறைவடைந்தன.
ஆட்சி அமைந்த சில நாட்களிலேயே, நிர்வாக வசதிக்காக அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய முதல்வர் விஜய் திட்டமிட்டார். அதன்படி, இன்று தமிழக அமைச்சரவையின் முக்கிய விரிவாக்கம் நடைபெற்றது. புதிய அமைச்சர்கள் பதவியேற்றதைத் தொடர்ந்து, அமைச்சர்களுக்கான துறைகள் அதிகாரப்பூர்வமாக ஒதுக்கீடு செய்யப்பட்டன. இந்த அதிரடி அமைச்சரவை விரிவாக்கத்தில், முதலமைச்சர் விஜய்யின் இலாகாக்களில் சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஏற்கனவே முதல்வர் விஜய்யின் வசம் பொது நிர்வாகம், உள்துறை, காவல் துறை, சிறப்புத் திட்ட அமலாக்கம், இளைஞர் நலம், குழந்தைகள் நலம், மாற்றுத்திறனாளிகள் நலம், நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற வளா்ச்சி மற்றும் குடிநீர் வழங்கல் ஆகிய முக்கிய துறைகள் இருந்தன. தற்போது செய்யப்பட்டுள்ள அமைச்சரவை விரிவாக்கத்தின் மூலம், முதல்வருக்கான துறைகளுடன் கூடுதலாக ‘வறுமை ஒழிப்பு மற்றும் கிராமப்புற கடன் சுமை ஒழிப்பு’ ஆகிய முக்கிய மக்கள் நலத் துறைகள் இணைக்கப்பட்டுள்ளன.
அதே நேரத்தில், நிர்வாகப் பரவலாக்கல் மற்றும் முக்கியத்துவத்தின் அடிப்படையில், ஏற்கனவே முதலமைச்சர் விஜய்யிடம் இருந்த ‘மகளிர் நலம்’ என்ற மிக முக்கியத் துறை, புதிய அமைச்சராகப் பதவியேற்றுள்ள ஜெகதீஸ்வரிக்கு மாற்றி வழங்கப்பட்டுள்ளது. தமிழக மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் வறுமை ஒழிப்புத் துறையை முதல்வர் நேரடியாகத் தன் வசம் எடுத்திருப்பது, தவெக அரசின் எதிர்கால மக்கள் நலத் திட்டங்கள் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.