ஏப்ரல் 8 முதல் அமலில் இருந்த அமைதி ஒப்பந்தத்தை மீறி, ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் மற்றும் ஃபுஜைரா (Fujairah) பகுதிகளில் ஈரான் இன்று அதிரடி ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. துபாய் சர்வதேச விமான நிலையம் மற்றும் ஃபுஜைராவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்தத் திடீர் தாக்குதலால் துபாய் மற்றும் ஷார்ஜாவில் விமானப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. கடந்த சில வாரங்களாக நிலவி வந்த அமைதிச் சூழல் தற்போது முழுமையாகக் குலைந்துள்ளதால், வளைகுடா நாடுகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
இந்தத் தாக்குதலுக்குப் பிறகு சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ள ஈரானின் முக்கியப் பேச்சுவார்த்தையாளர் முகமது பாகர் காலிபாஃப் (Mohammad Bagher Ghalibaf), “அமெரிக்காவின் இருப்பு எங்களைப் பொறுத்தவரை சகித்துக்கொள்ள முடியாத ஒன்று. நாங்கள் இன்னும் எங்களது ஆட்டத்தைத் தொடங்கவே இல்லை, இப்பதான் ஆரம்பிச்சிருக்கோம்” என்று பதிவிட்டுள்ளார். ஈரானின் இந்த ஆக்ரோஷமான கருத்து, போர்நிறுத்த ஒப்பந்தம் இனி தொடர்வதற்கு வாய்ப்பில்லை என்பதையே காட்டுகிறது. ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்காவின் ‘புராஜெக்ட் ஃப்ரீடம்’ (Project Freedom) நடவடிக்கைகளுக்குப் பதிலடியாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் தரப்பு கூறுகிறது.
இதற்கிடையில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் வணிகக் கப்பல்களுக்கு இடையூறு விளைவிக்க முயன்ற ஈரானின் 7 சிறிய போர்க்கப்பல்களை அமெரிக்கக் கடற்படை தாக்கி அழித்துள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். “ஈரான் மிகக் கடுமையான விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும்” என்று எச்சரித்துள்ள டிரம்ப், ஈரானின் அமைதித் திட்டத்தை நிராகரித்துள்ளார். ஈரானின் ட்ரோன் தாக்குதலில் ஃபுஜைரா எண்ணெய் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டதில் மூன்று இந்தியர்கள் காயமடைந்துள்ளதாகவும், பல வணிகக் கப்பல்கள் சேதமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது துபாய் மற்றும் ஷார்ஜாவில் அவசரக்கால எச்சரிக்கை விடுக்கப்பட்டு, மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஈரானின் இந்தச் செயலைக் கடுமையாகக் கண்டித்துள்ளன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், பொருளாதார ரீதியாகவும் பெரும் தாக்கம் ஏற்படும் என அஞ்சப்படுகிறது. ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான இந்த நேரடி மோதல், ஒரு முழு அளவிலான போராக மாறுமா என்ற அச்சம் உலக நாடுகளிடையே எழுந்துள்ளது.