முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் மற்றும் மல்லிகா தம்பதியின் ஒரே மகளான டாக்டர் அன்புக்கரசி மாறன், சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன் மற்றும் திமுக எம்.பி. தயாநிதி மாறன் ஆகியோரின் ஒரே சகோதரி ஆவார். இதய சிகிச்சைப் பிரிவில் மருத்துவம் பயின்ற அவர், கேரளாவைச் சேர்ந்த மருத்துவர் ரானா பல்லாட்டைத் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவின் சவுத் கரோலினாவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
காவ்யா மாறனின் அத்தையான அன்புக்கரசி, அனிருத் ரவிச்சந்தர் மற்றும் காவ்யா மாறன் திருமணத்தைத் தொடர்ந்து அவர் அளித்த பழைய யூடியூப் பேட்டி வழியாக மீண்டும் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளார். தன்னை வளர்த்ததில் கலாநிதி மாறனின் மனைவி காவிரிக்குப் பெரிய பங்கு உண்டு எனவும், தனது தந்தை முரசொலி மாறன் ‘திராவிட இயக்கத்தின் வரலாறு’ புத்தகத்தை எழுதியபோது அவருடன் இணைந்து புத்தகங்கள் எடுத்துக் கொடுத்த நினைவுகளையும் அவர் அந்தப் பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி வயது வித்தியாசம் பார்க்காமல் அனைவரிடமும் நல்ல விஷயங்களைக் கேட்டுக்கொள்வார் என்றும், தன்னிடம் மருத்துவம் குறித்து நிறைய விசாரிப்பார் என்றும் அன்புக்கரசி குறிப்பிட்டுள்ளார். மேலும், சிறுவயதில் செந்தாமரை, உதயநிதி, அஞ்சு ஆகியோருடன் இணைந்து மு.க. ஸ்டாலின் அறையில் வீடியோ கேம் விளையாடியதையும், அவர் தங்களைக் கடற்கரைக்கு அழைத்துச் சென்று ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்ததையும் நினைவுகூர்ந்துள்ளார்.
தனது அண்ணன் மகளான காவ்யா மாறனை ஒரு நண்பராகவே பார்ப்பதாகவும், அவர் மிகவும் பொறுப்பானவர் என்றும் அன்புக்கரசி பாராட்டியுள்ளார். சன் மியூசிக், சன் நெக்ஸ்ட் (Sun NXT) தளம் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வளர்ச்சியில் காவ்யாவின் பங்களிப்பு தனக்குப் பெருமை அளிப்பதாக அவர் தெரிவித்த கருத்துகள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன.