ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளின் போது அமெரிக்க ராணுவத்திற்குச் சொந்தமான 81 போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ட்ரோன்கள் சேதமடைந்துள்ளன அல்லது அழிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க நாடாளுமன்ற ஆராய்ச்சி மையம் (CRS) தயாரித்துள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய போரில் ஏற்பட்டுள்ள இந்த இழப்புகளை ஈடுசெய்யக் குறைந்தபட்சம் $1.9 பில்லியன் முதல் $3.3 பில்லியன் டாலர் வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி, அமெரிக்கா இழந்துள்ள படைக்கலன்களில் 45 அதிநவீன எம்.க்யூ-9 ரீப்பர் (MQ-9 Reaper) ட்ரோன்கள், 12 எஃப்-15இ (F-15E) போர் விமானங்கள் மற்றும் ஒரு எஃப்-35ஏ (F-35A) ஸ்டீல்த் போர் விமானம் ஆகியவை அடங்கும். மேலும், ஈ-3 சென்ட்ரி (E-3 Sentry) உளவு விமானம், ஏழு கே.சி-135 (KC-135) எரிபொருள் நிரப்பும் விமானங்கள் மற்றும் பல்வேறு ரக ஹெலிகாப்டர்களும் இதில் சேதமடைந்துள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் வெளியிட்ட அறிக்கையில் 42 விமானங்கள் மட்டுமே சேதமடைந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது குறித்து அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இருப்பினும், இழந்த பல சாதனங்கள் சீரமைக்கப்பட்டு மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், தங்களது ஆயுத உற்பத்தித் திறன் 2.5 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொடர் இழப்புகள் அமெரிக்க ராணுவத்தின் செயல்பாட்டுத் திறனைப் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், போர் உபகரணங்கள் கொள்முதல் திட்டங்களில் மாற்றங்களைச் செய்வது குறித்து அமெரிக்க அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர். மேலும், இத்தகைய பெரும் நிதி இழப்புகள் மற்றும் உபகரணப் பற்றாக்குறையை எதிர்கொள்ள அமெரிக்க நாடாளுமன்றம் உரிய நடவடிக்கை எடுக்கும் எனக் எதிர்பார்க்கப்படுகிறது.